தினமும் கலர் டிரஸ், படிப்புல இருக்காது ஸ்டிரஸ், செல்போன் சாட்டிங், வாரமொருமுறை டேட்டிங், கன்னா பின்னா ஊர் சுத்தல், காதில் வாங்காத பெற்றோரின் பிணாத்தல் – இதுதான் கல்லூரி வாழ்க்கை என்று கலர் கனவுகளோடு பள்ளி முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைப்பவர் நீங்களென்றால், உங்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு அதிர்ச்சி வைத்தியம்தான். மேலே சொன்னதெல்லாம் உண்மையில் மாயை, கல்லூரி வழக்கில் சொன்னால் அம்புட்டும் பீலாதான். நிதர்சனமாக பார்த்தோமேயானால் கல்லூரி வாழ்க்கை என்பது, எஞ்சிய உங்கள் வாழ்வின் தலையெழுத்தை இன்றே கண் முன் காட்டும் ஒரு ஆக்டோபஸ் ஆருடம் போன்றதுதான். ரொம்பவே கவனமா இருக்க வேண்டிய இந்த பருவத்தில் நீங்கள் எவற்றை எவ்வாறு சமாளிக்கலாம் என்னும் அசால்ட் அணுகுமுறைகளை இங்கே தொகுக்கிறோம். காலேஜ் மாணவராகப்போகும் நீங்கள் முதலில் சமாளிக்க வேண்டிய சவால் சீனியர்களுக்கு போட வேண்டிய சலாமாகத்தான் இருக்கும். எவன்டா கண்டுபிடிச்சான் இந்த ரேகிங்க? என்று எரிச்சல் வரும் அளவுக்கு கடுப்பேத்துவார்கள். ஊரிலுள்ள அத்தனை கோயிலுக்கும் நேந்து கொண்டு நீங்கள் சபித்துக் கொட்டும் அதே சீனியர்தான் உங்களுக்கு அடுத்தடுத்த வருடங்களில் படிப்பிலும், இன்ன பிறவற்றிலும் உதவியாய் இருப்பார் என்பது மறுக்கவே முடியாத உண்மை. ஒரு அளவைத் தாண்டினால் ரேகிங் கடும் தண்டனைக்குரியது என்பதால் எல்லாவற்றையும் பொறுத்து கொண்டிருக்கவும் வேண்டாம். ரேகிங் பற்றி ஒரு அனுபவஸ்தரை தேடிப்பிடித்து கருத்து கேட்டோம். “நான் இப்போ ஃபைனல் இயர் படிக்குறேன். ஃபர்ஸ்ட் இயர்ல எனக்கு கடும் தலைவலியாயிருந்த ராகிங் செகண்ட் இயர்ல என்னவோ ரொம்ப அழகாவும் அர்த்தமுள்ளதாவும் தெரிஞ்சுது. ஆனா இன்னைக்கு ராகிங் எனும் பேருல லிமிட்ட கிராஸ் பண்றாங்க. அந்த மாதிரி நேரத்துல மன உளைச்சல் அடைவதோ, தற்கொலைக்கு முயல்வதோ டோட்டல் வேஸ்ட். யாருக்காகவோ நீங்க ஏன் உயிர விடணும். கல்லூரின்னு வந்துட்டாலே முதல்ல நமக்கு இருக்க வேண்டியது தைரியம்தான். தைரியமா எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணுங்க” என்று ராகிங் பற்றி பி.ஹெச்.டி. முடித்த ரேஞ்சில் சொல்லிவிட்டுப் போனார் இஞ்சினியரிங் மாணவரான பிரபு. சரி ராகிங்கை கடந்துவிட்டோம், அடுத்து? என்றுமே நம் கண்களுக்கு எதிரிகளாகத் தெரியும் பேராசிரியர்கள். உங்கள் கல்லூரியின் அத்தனைப் பேராசிரியர்களிடமும் நீங்கள் நல்லப் பெயர் வாங்கிவிட்டீர்களேயானால் உங்களுக்கு சைக்காலஜி டிகிரியை படிக்காமலேயே கொடுக்கலாம். காரணம் அவர்களை சமாளிப்பதற்கும் ஒரு தனி தகுதி வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு விதமாக இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் மைனஸ்களை ஒதுக்கிவிட்டு பிளஸ்பாயிண்டை மட்டும் பார்த்து ஏற்றீர்களேயானால் வெற்றி நிச்சயம். ஒரு ஆசிரியரை பிடித்திருந்தால் மட்டுமே அவர்களது பாடங்களிலும் ஆர்வம் வரும் என்பது அரிச்சந்திரன் மீது ஆணையாக உண்மையே. இதைப்பற்றி ஒரு படிப்புப் புழுவிடம் கேட்டபோது, “பொதுவா ஸ்கூல் மாதிரி இங்க யாரும் படிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ண மாட்டாங்க. ஆனா இண்டெர்னல் மார்க் அப்புடிங்கிற ஏகே47 அவங்க கையில இருக்குறவரைக்கும் நாம கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கணும். பொதுவா எந்த வாத்தியாரும் உங்ககிட்ட மரியாதையத் தவிர எதையும் எதிர்பார்க்கமாட்டாங்க. அந்த மரியாதைய கொடுக்குறதால நமக்கு எந்த நஷ்டமும் கிடையாது. அதே சமயம் உங்களோட சுய மரியாதைக்கான காப்பீடும் ஆசிரியர்களிடம் உண்டு. அது நீங்க நடந்துக்குற விதத்துலதான் இருக்கு. அமைதியா ஆட்டம் போட்டா பிரச்சினையேயில்ல. அளவுக்கு அதிகமா அளப்பறைய கொடுத்தா ஆப்பு கன்ஃபார்ம். பார்த்து நடந்துக்கோங்க” என்று அட்வைஸ் அருவியாய் பொளந்துகட்டினார் கல்லூரி மாணவரான ராமச்சந்திரன். அடுத்து ரொம்ப முக்கியமான கல்வி பக்கம் போவோமா? நீங்கள் எதிர்பார்ப்பதைப் போல் பள்ளி மாதிரி உங்களைப் படிக்கச்சொல்ல ஆள் இருக்கமாட்டார்கள்தான். அதே சமயம் பள்ளியைப்போல் தனி கவனத்தோடு சொல்லித்தருவதிலும் ஆள் தட்டுப்பாடு கல்லூரிகளில் உண்டு. நீங்கள்தான் உங்களுக்கு வழிகாட்டி. பள்ளியில் கிடைத்ததைவிட இனி நிறைய நேரம் இருக்கப்போகிறது. அதை எப்படி உபயோகிக்கப் போகிறீர்கள் என்பதில்தான் வெற்றிக்கான சூச்சுமம் இருக்கிறது. இது பற்றி ஒரு பேராசிரியரிடமே கேட்டோம். “காலேஜ் வந்துட்டா படிக்கவே வேணாம். பாஸ் ஆனா போதுங்கிற மாதிரியான ஒரு மனப்போக்கு தமிழ் சினிமா பார்த்து பார்த்தே நம்ம மாணவர்கள் மனசுல ஆளப் பதிஞ்சிருக்கு. ஆனா இதுவரை நீங்க படிச்சது உங்க கல்வி மேம்பாட்டுக்குத்தான். இனி நீங்க கல்லூரியில படிக்கிறதுதான் வாழ்க்கை மேம்பாட்டுக்குங்கிறத புரிஞ்சுக்கோங்க. நிறைய படிக்க வேணாம். நிறைவா படிச்சாப் போதும். தமிழ் மீடியம் முடித்த மாணவர்கள் எந்த வகையிலயும் உங்கள நீங்களே ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாக்கிக்காதீங்க. உண்மையில இன்னைக்கு கம்பெனி அரியாசனத்துல நுனி நாக்கு இங்கிலீஸ் பேசுற பலரும் தமிழ் மீடிய மாணவர்கள்தான். இன்னும் நிறைய கத்துக்கணும்கிற ஆர்வம்தான் ரொம்ப முக்கியம். புரிஞ்சு படிங்க. திட்டமிட்டுப் படிங்க. அது போதும். வெற்றி உண்டு எக்ஸாம்லயும், வாழ்க்கையிலயும்” என்று ஊக்கம்கொடுக்கிறார் கம்ப்யூட்டர் பேராசிரியரான ரமேஷ். படிப்பிற்கு அப்பாற்பட்ட பல விஷயங்களும் நீங்கள் சந்திக்க வேண்டி வரும். இந்த பருவ மாற்றம் உங்களை வளரவிடாமல் செய்ய கோடி இன்னல்களை கொண்டு வரும். நீங்கள் இந்த ரிஸ்கையெல்லாம் ரஸ்க் போல் நொருக்கித் தள்ள வேண்டும். 1->”மச்சான் ஒரு தம் அடிப்போமா?” 2->“உனக்கு என்ன பைத்தியமா,இதென்ன புது பழக்கம்? ஆளவிடுடா சாமி” 1->“உனக்கு வேணாம்னா போ..” சில நிமிடங்களுக்குப் பின்..1->”மச்சான் ஒரே ஒரு பஃப் டிரை பண்ணுடா” 2->“வேணாம்டா வீட்டுக்குத் தெரிஞ்சா கொன்னே போட்டுடுவாங்க..” சில நொடிகளில் 1->“மச்சான் கடைசியா கேக்குறேன், ஒரு பஃப் நீ இழுக்குறது எப்புடிடா வீட்டுக்குத் தெரியும்?” 2->“அதுக்கில்ல.. அது வந்து… சரி குடுடா..” இப்படித்தான் விதி நம் மூளைக்குள் கபடி விளையாடுகிறது. ”வேண்டாம்” என்கிற ஒற்றைச் சொல்லை வைத்து நீங்கள் இது போன்ற விளையாட்டுகளில் ஈஸியாக ஜகா வாங்கலாம். அந்த வேண்டாம் என்கிற சொல்லின் ஆயுள் நீட்டிப்பைப் பொறுத்தே உங்கள் முடிவிலிருக்கும் தெளிவு தெரியும். ஒரு முறை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அது எப்பேற்பட்ட சுகத்தைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று தீர்க்கமாக இருங்கள். இது புகை மட்டுமல்லாது இந்த வகையறாவிலிருக்கும் அத்தனை தொற்று கெட்டப் பழக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். இதைப் பற்றி நேரு எனும் மாணவர் சொல்லும்போது, “ஒரு புது படத்துக்கு போகணும்னு முடிவு செஞ்சுட்டா, பிளாக்லயாவது டிக்கெட் எடுத்து பாக்குறோமில்லையா? அதுல இருக்குற ஒரு பிடிப்பை கெட்ட பழக்கங்களை ஒதுக்குறதுல காட்டுனா நிச்சயமா தப்பிச்சுடலாம்” என்று டிப்ஸ் கொடுக்கிறார். எல்லாவற்றையும்விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. உங்களுடைய பெற்றோரை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் அது. மாணவர் ராம்குமார் இதைப் பற்றி சொல்லும்போது, “காலேஜ் சேர்ந்தபிறகு நீங்க அவங்கள எதிர்த்து பேசுனாலே, “கிளிக்கு ரெக்க முளைச்சிடுத்து..” என்றுதான் சொல்வார்கள். எந்தத் தருணத்திலும் உங்க பெற்றோர் மேல கோபப்படாதீங்க. ஊருல யாராரோ திட்டும்போது நமக்கு இருக்குற பொருமை அப்பா அம்மா பேசுறப்ப மட்டும் ஏன் இருக்குறதில்ல? பொதுவா உங்களோட பிரச்சினைகள உட்கார்ந்து பேசுங்க. ப்ளீஸ்! உங்க பெற்றோர்-பிள்ளை உறவுக்குள்ள இருக்குற பாச பரிமாற்றமெல்லாம் நீங்க மனசுவிட்டு பேசுனா மட்டும்தான் தெரியும்” என்று செண்டிமெண்டாக ஆஃப் செய்தார். இதையும் தாண்டி புனிதமானது எனும் பெயரில் ஒரு நோய் கல்லூரியில் வரும். மிக மோசமான அந்த நோயின் பெயர் “காதல்”. இதைப்பற்றி எத்தனை பக்கங்கள் எழுதினாலும் பலருக்கும் புழப்படாது, காரணம் காதலுக்குத்தான் கண்,காது,மூக்கு என்று எதுவுமே கிடையாதே? ”இதைப்பற்றிய ஒரு ஒன்லைன் மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். சரியான சமயத்தில், நீங்கள் யாரையும் சாராத நிலையில், உங்களை சார்ந்து யாரும் இல்லாத சூழலில் மட்டும் காதல் செய்யுங்கள்” என்று பஞ்ச் அடித்தார் இதுவரை நோய் தாக்கப்படாத மாணவரான ஸ்டாலின். மேலே சொன்ன அத்தனையுமே கல்லூரி எனும் ஒரே கூரையில் நீங்கள் சந்திக்கப்போகும் பல்வேறு ஏழரைகள். இவை அனைத்தையும் கவனத்தோடு கடந்து வாழ்வின் வெற்றியை மட்டுமே நோக்கி நடக்கத் துணிந்துவிட்டீர்களேயானால், சபாஷ். நீங்கள் அனைவருமே ஏழரையை நொறுக்கி காலரைத் தூக்கி வெற்றியடைய புதிய தலைமுறை வாழ்த்தி கல்லூரிக்கு வழியனுப்புகிறது.
Monday, August 2, 2010
”கல்லூரிச் சாலை!..கவனம் தேவை!..” ஸ்கூலேஜ் To காலேஜ் டிப்ஸ்…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment