Tuesday, October 26, 2010

மறக்க முடியாத ஒரு பெளர்ணமி இரவு...

”பெளர்ணமி இரவு, மொட்டை மாடி நிலவு”- இப்படி நம் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளும் எத்தனையோ கவிஞர்களின் ரசனைகளைக் கேட்டிருப்போம். உண்மையில் இந்த இரவின் இனிமை நம்மில் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்? அதுவும் சீர்மிகு சிங்கார சென்னையிலிருக்கும் நம் பலருக்கும் திருவண்ணாமலை பேருந்துகளில் மிதமிஞ்சிய கூட்டத்தைக் காணும்போதுதான் அன்று பெளர்ணமி என்பதே புலப்படுகிறது. “நானெல்லாம் ஒரு காலத்துல நிலாச்சோறு சாப்பிட்டுகிட்டே, வெட்ட வெளியில என் நண்பர்களோடு அரட்டை அடிச்சுகிட்டு, எங்க ஊரு டூரிங் டாக்கீஸ்ல படம் பாக்குறப்ப…. ம்ம்ம்ம்… அதெல்லாம் ஒரு காலம்” – இப்புடி ஏக சலிப்பு கூட்டமொன்று நம்மிடையே உண்டு. அவர்கள் அனுபவமாய் சொல்வதைக்கூட வார்த்தையாய் கேட்க மட்டுமே கொடுத்து வைத்தவர்கள் நாம் என்பது வருத்தத்திற்குரியதே…
பெளர்ணமி இரவின் வணக்கங்களோடும், விளக்கங்களோடும் அருண் நிகழ்ச்சியைத் தொடங்க, முதலில் திரையிடப்பட்டது ”பயணம்”- எனும் தமிழ் குறும்படம். மூன்று விருதுகளோடு வாகை சூடி வந்திருந்தது அத்திரைப்படம். படத்தின் கர்த்தாவான இயக்குனர் சுப்புராஜும் நம்மோடு படத்தை பார்த்தார். வட மாநிலத்திலிருந்து நான்கு பிள்ளைகளால் துறத்தியடிக்கப்பட்ட ஒரு தந்தையின் மும்பை முதல் கன்னியாக்குமரி வரையிலான ஒரு பயணத்தை இயக்குனர் பதிவு செய்திருந்தார். 15 நிமிட படத்தின் ஒளிபரப்பு முடிந்த கையோடு இயக்குனரோடு ஒரு கலந்தாய்வு அவ்விரவை இன்னும் விறுவிறுப்பாக்கியது. ஏன்? எதற்கு? ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது? என்று கேள்விகள் அனைத்திற்கும் நிறைவாய், சமாளிப்பாய் பதில் சொல்லி அசத்தினார் இயக்குனர். மேலும் “என்னுடைய தந்தை ஒரு பேங்க் ஆபிஸர். அவரது நீண்ட நாள் கனவான சினிமாவை வைத்து அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்க நினைத்தோம். நானும் என் சகோதரர்களும், அதற்காகவே இந்தத் திரைப்படத்தை தந்தை எனும் கருவில் எடுத்து முடித்தோம்” என்று பெருமிதத்தோடு சொன்ன இயக்குனரின் தந்தை பாசத்திற்கு கை கொட்டுகள் ஏராளமாய் விழுந்தன. ”தமிழ் ஸ்டூடியோ.காம்” மாற்று ஊடகத்திற்கு களமாய் திகழும் இவர்கள் மேற்கூரிய நம் புலம்பல்களுக்கு தடா போடும் வகையில் உருவாக்கியிருப்பதுதான் “பெளர்ணமி இரவு”.. கோட்டைக்கு வடிகாலாம் கோடம்பாக்கத்தில், அவர்தம் அலுவலக மாடியில் புல்வெளியோடு, மூலிகை செடிகளும் நம்மை சூழ்ந்திருக்க, நிலவு மங்கையின் ஒளிக்கீற்று மட்டுமே மாடியை நிறைத்திருக்க, மெகா ஸ்கிரீனில் திரைப்படங்கள்.. அதுவும் டிஷ்யூம் டுமீல் ரகம் அல்ல, அழுவாச்சி சிரிப்பாச்சி வகையறாவும் அல்ல, இரண்டு படங்களுமே, நம் மனதை மயிலிறகாய் வருடும் இதமான இளையராஜா மெலோடி போன்றவைத்தான். மாடியின் அட்மாஸ்ஃபியரே நம்மை ஆட்கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சிறிய இடைவேளை. தொடர்ந்தது இரானிய இயக்குனர் மஸ்ஜித்மஸ்ஜிதி இயக்கத்தில் “தி கலர் ஆஃப் பேரடைஸ்” எனும் உலக சினிமா. ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் ஒரு கண் பார்வையால் சவால்விடப்பட்ட சிறுவனின் கதையை உருக்கமாய் சொல்லியிருந்தார் இயக்குனர். படத்தில் நிறங்கள் பேசின, அசைவுகள் பேசின, ஒளிப்பதிவு ஒரு புறம் பேச, ஒலிச் சேர்ப்பு மறுபுறம் பேசின, காட்சியும், கருமமும்கூட பேசின, உண்மையில் இயக்குனர் பேச நினைத்ததையெல்லாம் பேசாமல் பேசின ஒண்றரை மணி நேர செல்லுலாய்டுப் பதிவுகள். ஒரு உண்மையான பேசும் படத்தைப் பார்த்து முடித்தக் கையோடு, பேசத் தொடங்கினோம் பேச்சில் வல்லுநர்களாகிய நாம். படத்தைப் பற்றிய பல்முனைக் கருத்துக்கள், பார்வைகள், தாக்கல்கள், தூக்கல்கள் என்று படம் பார்த்ததைவிட சிறந்ததொரு அனுபவத்தை அந்த அலசல் தந்தது எனலாம். இரவு மணி 1… இனிய இரவின் காட்சிப் பகுதி நிறைவுக்கு வரவே நன்றிகளோடு அடுத்தடுத்த பெளர்ணமி இரவுக்கான வரவேற்பையும் பகிர்ந்துகொண்டார் அருண்.

மொட்டை மாடி, நிலா வெளிச்சம், அரட்டை இல்லாமலா? இரவு தங்குபவர்கள் தங்கலாம் என்னும் அறிவிப்பு நம்மைக் குஷிபடுத்த நம்மைப்போலவே தங்குவதற்குத் தயாரானார்கள் பலரும். ஒத்த ரசிப்புத் திறன் கொண்ட இத்தனை பேரை பார்ப்பதே அரிதான இக்காலத்தில் அவர்களோடு நட்பு பாராட்டவும் வழி கிடைத்தால்? டபுள் தமாக்கா ஆஃபர் தந்த தமிழ் ஸ்டூடியோவிற்கு மீண்டும் ஒரு நன்றி சொல்லி வணக்கம் போட்டோம் எங்கள் அரட்டைக்கு. எது நல்ல சினிமா? மாற்று ஊடகம் என்றால் என்ன? என்று தொடங்கி டிவி, மீடியா, நாடு, நிலைமை, இணையம், பதிவுலகம், பஞ்சுமிட்டாய் என அத்தனைக்குள்ளும் சென்று வந்த விவாதங்களுக்கு எண்ட் கார்ட் போட்ட நேரம் என்ன தெரியுமா? அதிகாலை 6.30…. சிந்தனை டேங்க் ஓவர்ஃபிளோ ஆகத் தொடங்கியதாலும் மறுநாள் பணிகள் பணித்ததாலும் வலுக்கட்டாயமாக ஒரு டீ குடித்து பிரிவு சோகத்தை ஆற்றி விடைபெற்றோம். இப்படி ஒரு இனிமையான, இதமான, இன்ஃபர்மேட்டிவான இரவு இதுவரை நான் பெற்றதில்லை. பெறச்செய்த தமிழ் ஸ்டூடியோவிற்கு நன்றிகள்.

இவ்ளோ பெரிய பதிவா? என்று என்னை ஏகவசனத்தில் திட்டிக்கொண்டிருப்பீர்களேயானால், அடுத்த பெளர்ணமி இரவிற்கு வந்து பாருங்கள். நான் பதிய மறந்த விஷயங்கள் எத்தனை இருக்குமென்று தெரியவரும்.

“பெளர்ணமி இரவு… எதிர்பார்க்கிறது வாழ்வின் ரசனையாளர்களது வரவு….”


நன்றி: www.thamizhstudio.com , to view this post directly,click below:

http://www.thamizhstudio.com/shortfilm_guidance_fmd_9.php

Thursday, October 21, 2010

”எங்களிடம் 100 நண்பர்களைக் கொடுங்கள்..!”



வளமான பாரதத்தை உருவாக்க சவால்விடும் விவேகானந்தர் யூத் கிளப்

உதவாக்கரை, உருப்படாதது, தருதலை, போக்கிரி இப்படி ஊர சுத்தி நல்ல பேரு வாங்குபவர்கள் நம் இளைஞர்களாகத்தான் இருக்க முடியும். அதிலும் ஒருவராக அல்லாமல் குழுவாக இருந்தார்களேயானால் இந்தத் திட்டும் இரட்டிப்பாகும். நாலு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் நாதாரித்தனம்தான் செய்வார்கள் என்கிற ரீதியிலான எழுதப்படாத சட்டம் ஒன்று நம் மக்களின் மனதில் பதிந்துள்ளது. இது முற்றிலும் தவறான எண்ணம் என்பதை செயலில் காட்டி வியக்கவைத்துள்ளனர் சென்னை நண்பர்கள். இவர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்துவதுதான் விவேகானந்தர் இளைஞர் மன்றம். வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னை வந்து படித்துக்கொண்டிருக்கும் இவர்கள் அனைவருமே சமுதாயத்தின் மீதான ஒரே அகலப்பார்வை கொண்டவர்கள் என்கிற அடிப்படையிலேயே நண்பர்களாகி, இன்று நட்பு காட்டிய வழியில், பலருக்கும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். “நாங்க எல்லாருமே ஃபிரெண்ட்ஸோட பிரெண்ட்ஸ்தான். எல்லாருக்குமே இந்தக் குழுவுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஒருவருக்கொருவர் பழக்கம். ஆனா நாங்க சமுதாயத்துக்கு எதாவது செய்யணும்ங்கிற ஒரே எண்ணத்தோட வந்ததால, எங்கள் பிரெண்ட்ஷிப் மேல ரொம்ப அதிக நம்பிக்கையும், மரியாதையும் இருக்குது. பொதுவா இளைஞர்கள் சேர்ந்தா சினிமாவுக்குப் போகணும், ஊர் சுத்தணும், நல்லா எஞ்சாய் பண்ணனும்னுதான் நினைக்குறாங்க. அதுக்காக நாங்க இதெல்லாம் துறந்துட்டு தியாகிகளா செயல்படல. இதுவும் எஞ்சாய் செய்யுறதுக்கான ஒரு வழிதான்னு பொறுப்பற்ற நிறைய பேருக்கு எடுத்துக்காட்டத்தான் இந்த அமைப்பத் தொடங்கினோம். இந்த மாதிரி இளைஞர்கள் சேர்ந்து கிளப் தொடங்குறது ஒண்ணும் புதுசுயில்ல. எங்களோட செயல்முறைகள்தான் எங்கள வித்தியாசப்படுத்திக் காட்டணும்னு ஆசப்பட்டோம்” என்று சொல்லும் குழுவின் தலைவரான ஸ்ரீகா, ஒரு பொறியியல் மாணவி.

எந்த மாதிரி வித்தியாசப்பட்டு செயல்படுறீங்க? என்று கேட்டோம். “நாங்க எல்லாத்தையுமே ரொம்ப ஆக்கப்பூர்வமா செய்யணும்னு நினைக்குறோம். எங்களோட நோக்கம் யூத் டிராண்ஸ்பர்மேஷன் என்று சொல்லப்படும், இளையோர் மனமாற்றத்திற்கானதே ஆகும். இதுல நாங்க டார்கெட் வச்சிருக்குறது எட்டாவது முதல் பணிரெண்டாவதுவரை படிக்கும் மாணவர்கள்தான். நாங்க இவங்களுக்கு விழிப்புணர்வுன்னு எதுவும் சொல்றதுல்ல. எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து, இவங்களையே விழிப்புணர்வ ஏற்படுத்தச் சொல்றோம். பிறர்க்கு ஒரு விஷயத்த சொல்லும்போது தானும் அத மனரீதியில ஏத்துக்க வேண்டிய கட்டாயத்த ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுத்துறோம். அதுதான் நாங்க எதிர்பார்க்குற மன மாற்றத்தை எங்களுக்கு எடுத்துக் காண்பிக்குது. ரொம்ப மனநிறைவா இருக்குது” என்று சொல்கிறார் இந்தக் குழுவின் அட்வைசராக இருக்கும் சாஃப்ட்வேர் பிரொபஷ்னலான உமா. நீங்கள் எத்தனை நாட்களாக இதை செய்கிறீர்கள்? என்னென்ன மாதிரியான நிகழ்வுகளை நடத்தி முடித்திருக்கிறீர்கள்? என்று கேள்விகளை அடுக்கினோம்.

“நாங்க எங்களோட குழுவத் தொடங்கி சரியா ஏழு மாசம் ஆகுது. முதல் நிலையில் ஒரு சில மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லங்களுக்குப் போனோம். அவங்களோட, நிறைய நேரத்த செலவு செஞ்சோம். பின் எங்களோட டார்கெட் நிர்ணயித்தப் பிறகு, நாங்கள் மயிலாப்பூர் மாங்கொல்லையிலிருக்கும் கற்பகவள்ளி நடுநிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்தோம். அங்க முதலில் மாணவர்கள எங்களோட பேசச் செய்யுறதுக்காக ஒரு சில நிகழ்வுகள நடத்தி, பின் அவங்களுக்கெல்லாம் நாங்க பேவரெட் அக்கா,அண்ணன்களா மாறுனதும் வாழப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி ஒரு சில அறிவு சார்ந்த விஷயங்கள சொல்லிகொடுக்கத் தொடங்குனோம். மாணவர்கள குழுக்களா பிரிச்சு எங்க குழுவினர் பயிற்சி கொடுத்தாங்க. வாழ்க்கையியல், கல்வி, சமூகத்தை எதிர்கொள்ளுதல், கெட்டவையிலிருந்து ஒதுங்கி இருத்தல், மன தளர்ச்சியுறாமல் இருத்தல் என்று பல்வேறு விஷயங்களை நன்குப் பதியச் செய்தோம். இண்டெர்நெட்டிலிருந்து பல ஊக்கம் தரும், தேசப் பற்றைத் தூண்டும் காட்சிகளை டவுன்லோட் செய்து பிரொஜெக்ட் செய்கிறோம். இன்னைக்கு அந்த மாணவர்களோட மனநிலையில பெரிய மாற்றம் தெரியுது. நாங்க ஞாயிற்றுக்கிழமையிலதான் அவங்கள பார்க்கப் போவோம். ஆனா நாங்களே கிளம்புறோம்னு சொன்னாலும்கூட விடமாட்டாங்க. இந்த மாணவர்களத் தொடர்ந்து நாங்க கையிலெடுத்தது ஆரணி பக்கத்துல இருக்கிற விண்ணமங்கலம் கிராம மாணவர்களை. அங்க இருக்குற ஒரு சில பெரிய மனிதர்களோட வேண்டுதலின் பேரில் நாங்க அங்கப்போனோம். ஒரு சர்வே மாதிரி போய் பார்த்தோம். அங்க இருக்குற எந்த ஒரு மாணவனுக்கும் லைஃப்ல பிடிப்பு இல்லாதத கண்கூடா பார்க்க முடிஞ்சுது. பெற்றோர்களுக்கு படிப்போட மகத்துவம் தெரியல. ரொம்ப சிரத்தையெடுத்து நாங்க அவங்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். சொன்னா யாருமே நம்பமாட்டாங்க, ரெண்டே நாள்ல அவங்களுக்கு அவ்ளோ விஷயங்கள எடுத்துக்குற மனப் பக்குவம் வந்திருக்கு. நாங்க போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பசங்க ரொம்ப ஒழுக்கமா நடந்துக்குறாங்களாம். அடிக்கடி எங்கள பத்தி அவங்க டீச்சர்ஸ்கிட்ட கேக்குறாங்களாம். தொடர்ந்து மாதமொருமுறை அங்கப்போய் வெறும் 50 சதவீதம்கூட இல்லாத அவங்களோட ரிசல்ட 100 சதவீதமாக்கணும்ங்கிறதுதான் எங்களோட இப்போதைய கனவு.

இவை இல்லாம முதலுதவி குறித்த விழிப்புணர்வு முகாம், மரம் நடும் விழாக்கள்னு அவ்வபோது செஞ்சுகிட்டு இருக்கோம்” என்று தங்கள் பணிகளை விவரித்தார் லா காலேஜ் மாணவியான ராஜேஷ்வரி. படிக்கும் வயதில் நிகழ்வுகளுக்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்? போக நேரம் உங்களுக்கு கிடைக்கிறதா? “படிக்கிற பசங்களுக்கு டைம் இல்லண்ணு சொன்னா அதுதாங்க மிகப்பெரிய காமெடி. இருக்குற டைம ஒழுங்கா யூஸ் பண்ணுனாலே நெறைய செய்யலாம். அது ஒண்ணும் பிரச்சினையேயில்ல. செலவுகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் என்கிற ரீதியில் மாதத்திற்கு முப்பது ரூபாய் ஒவ்வொரு உறுப்பினரிடமும் பெறுகிறோம். அத வச்சுதான் எல்லா செலவுகளையும் செய்யுறோம். இது போக ஒரு சில பெரிய மனிதர்கள் ஒவ்வொரு வகையில சர்டிபிகேட் அடிக்க, பரிசு கொடுக்கனு உதவி செய்யுறாங்க” என்று சொல்லும் ஸ்ரீகாவிடம், அடுத்தடுத்த பிளான்களைப் பற்றி கேட்டோம். “ஏற்கனவே நாங்க சிறப்பான மாணவர்கள்னு தேர்ந்தெடுத்திருக்குற கற்பகவள்ளிப் பள்ளியைச் சேர்ந்த பத்து பேரையும் எங்க குழுவினுடைய பயிற்சியாளர்களா சேர்த்து விண்ணமங்கலத்துக்கு அழைச்சிட்டுப் போக இருக்குறோம். இப்படி எங்க குழுவ ஒரு பெரிய அளவுல சமுதாயத் தாக்கத்துக்கு தயார் செய்யுறோம். மேலும் அடுத்த பிராஜெக்டா எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளிக்கு செல்ல இருக்கிறோம். அதற்காக எங்களை நாங்களே தயார் செஞ்சுகிட்டு இருக்கோம். மேலும் ஒரு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, சிறைச்சாலை பிராஜெக்டும் பிளான் செஞ்சிருக்கோம்” என்று மகிழ்ச்சியாக குறிப்பிடுகிறார் ராஜேஷ்வரி.

“இதுமட்டுமில்லாம எங்க குழுவுக்குள்ள இருக்கக்கூடிய நண்பர்களுக்குள்ளும் ஒருவருக்கொருவர் உதவியா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கோம். எங்க நட்பைப் போலவே எங்க குழுவும் பெரிய அளவுல வளரணும்னு ஆசப்படுறோம்” உங்க குழுவுக்கு ஏதாவது தடைகள் இருப்பதாக உணர்கிறீர்களா? “அப்புடி பெருசா தடைகள்னு எதுவுமில்ல. பணப்பிரச்சினை கொஞ்சம் இருக்கு. அத சமாளிச்சுடலாம். ஆனா எங்களோட பயிற்சிக்கு ரொம்ப அத்தியாவசியமா இருக்குற பிரொஜெக்டர் குறைந்த வாடகைக்கு யாராவது தர முன்வந்தா ரொம்ப சந்தோஷப்படுவோம். எங்க குழுவுல இதுவரை 50 பேருதான் இருக்கோம். இன்னும் நிறைய நண்பர்கள் சேர்ந்தா நிச்சயமா நிறைய விஷயங்கள் செய்ய முடியும்னு நினைக்குறேன். பலருக்கும் ஏதாவது செய்யணும்னு தோணும். ஆனா எப்புடி ஆரம்பிக்குறதுன்னுதான் தெரியாது. அப்புடி சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறவங்கள சிவப்புக் கம்பலத்தோட வரவேற்கிறோம்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் உமா. நட்பால் இணைந்த இந்த இளைஞர்களின் வரலாறு நிறம் மாறுவதை நன்றாகவே உணர முடிகிறது. “கனவுகள் அல்ல.. காரியம் துணை..”- ஓயாமல் எதையோ நோக்கி உழைக்கும் இவர்களை பார்க்கும்போது தெளிவாகும் உண்மை இதுதான். வாழ்த்துவோம், வளரட்டும் நாளைய சமூகத்தின் இன்றைய சிற்பிகள். இவர்களுக்கு உதவ நினைப்போர், இவர்களோடு சேவையில் கை கோர்க்க நினைப்போர், தொடர்புக்கு 9360403330.