Monday, June 21, 2010

பாசத்தைப் பங்கு போடும் எஃப்.எம். பங்காளி



வறுமையை வென்றவர், இன்று வாழ்க்கை கொடுக்கிறார்

திருச்சி காவேரி ஆற்றுப்பாலம். விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் ஒருவர். ஆம்புலன்ஸ் வெகு நேரமாகியும் வரவில்லை. புகார் காவல்துறைக்கு போகவில்லை. மாறாக ஒரு எஃப்.எம். நிகழ்ச்சிக்கு வருகிறது அழைப்பு. நிகழ்ச்சிக்கு நடுவே திடீரென்று பாடலை நிறுத்திவிட்டு அறிவிப்பாளர் இந்த செய்தியை வெளியிடுகிறார். அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஸ்பாட்டிற்கு விரைகிறது. ஒரு உயிரும் காப்பாற்றப்பட்டுவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் இந்த செய்தியும் காற்றில் தவள நேயர்களுக்கு பதட்டம் தனிந்தது. அறிவிப்பாளர் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நன்றி சொல்ல, திருச்சிவாசிகளோ பங்காளிக்கு நன்றி சொன்னார்கள். ”யார் இந்தப் பங்காளி?” விசாரித்தோம். பேரைக் கேட்டாலே திருச்சியே குதூகலப்படும் இந்தப் பங்காளி, ரேடியோ ஹலோவின் ஆர்.ஜே.வான ராஜா தான். ராஜா தொகுத்து வழங்கும் “பல்லாங்குழி” விளையாட்டு நிகழ்ச்சியின்போது நடந்த நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வுதான் நாம் மேலே குறிப்பிட்டது. விளையாட்டான ஒரு நிகழ்ச்சியை சமூக அக்கறையோடு கையாளும் இவர் தனது வாழ்க்கையை மூட்டை தூக்கி ஆரம்பித்து, இன்று ஆயிரக்கணக்கில் காசை அள்ளும் ஆர்.ஜே.வாகியிருக்கிறார். இவரது சுறு சுறு வாழ்க்கைப் பயணத்தை இவரை வைத்தே ரீவைண்ட் செய்தோம். அது ஒரு காலம் அழகிய காலம் என்கிற ரீதியில் ஆரம்பித்தவர், “என்னுடையக் குடும்பம் சராசரியான மிடில்கிளாஸ்தான். சின்ன வயசுல இருந்தே இதுதான் பாதை அப்புடின்னு இல்லாம எனக்கு அமையுற வழிகள்லதான் பயணப்பட்டிருக்கேன். ஆனா ஒரு சில நேரங்கள்ல நான் சில சரியான முடிவுகள் எடுத்ததாலதான் இன்னைக்கு இருக்குற இந்த நிலைமைக்கு வந்திருக்கேன். அநேகமாக இந்நேரத்துக்கு திருப்பூர்ல ஏதோ ஒரு பனியன் கம்பெனியில பல கஷ்டங்களுக்கு அப்புறம் ஒரு சூப்பர்வைசரா ஆகியிருப்பேன்னு நினைக்குறேன். எங்கேயோ நூல் கோர்க்குற ஆலையில இருக்கவேண்டிய ராஜா, இன்னைக்கு ஊரே உற்று நோக்குற ஒரு துறையில இருக்கேன்னா…” – அதுக்கு இப்படி பட படன்னு இவர் பேசுறதுதான் காரணம்னு மனசுல நினைச்சுக்கிட்டோம். பிளஸ்டூ-வில் இவரது மதிப்பெண் மிக சிறப்பாகவே அமைந்தது. ஆனால் இவரது குடும்ப சூழ்நிலை சற்றே விளையாடியது. அதுவரை வறுமை தெரியாமல் செல்லமாய் பெற்றோர் வளர்த்தாலும், அவர்களால் இஞ்சினியரிங் படிக்க வைக்க முடியாத நிலையை புரிந்துகொண்ட இவர், எப்படியும் ஒரு ஆசிரியர் ஆகிவிடலாம் என்கிற எண்ணத்தில் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். பல சமயங்களில் தீபாவளி, பொங்கலுக்குக்கூட துணி எடுக்க முடியாத நிலை இருந்துள்ளதாம். இதனாலேயே காலேஜ் வாழ்க்கைக்குப் பிறகு இவர் பண்டிகைகளைக் கொண்டாடுவதே இல்லை. “காலேஜ் படிக்கும்போது எப்படியும் நாம எங்காவது கவர்மெண்ட் வேலையில சேர்ந்து காலாட்டிகிட்டே சம்பாதிக்கலாம் என்று சொகுசு கனவு கண்டேன். ஆனா அத முடிக்கும்போது ஒரு வெறும தாக்குனுச்சு. என்னுடைய தாத்தாவோட கிளாஸ்மேட்லாம் எம்பிளாய்மெண்ட் ஆபிஸ்ல வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்குற விஷயம் பிறகுதான் தெரிஞ்சுது. ரைட், கவர்மெண்ட் கனவு கந்தல். அடுத்தது, பிரைவேட்லயாவது ஏதாவது? ம்ஹூம். இதுக்கு மேலேயும் வீட்ட நம்பியிருந்தா அசிங்கம்னு முடிவு எடுத்து, யூசுவல் பட்டதாரிகளோட சாய்ஸான ஏதோ ஒரு வேலைங்கிற கான்செப்ட்ல வேலை தேடினேன். அப்போ ஒரு பிரெண்ட் சொன்னதால திருப்பூர் பனியன் கம்பெனியில வேலைக்கு சேர்ந்தேன். என் வாழ்க்கையோட ரொம்ப சிரமமான காலம் அதுதான். ஆனா, என் புள்ள பெரிய சூப்பர்வைசரா வேல செய்யுறான். அவன் இல்லனா அந்த கம்பெனியில ஒரு துறும்புகூட நகராது என்கிற ரேஞ்சில் என் அம்மா பேசுற மாதிரி வீட்டுல கவுரவமா புழுகியிருந்தேன். திருப்பூரில் முதல் நாள் வேலை முடித்தபோது, எனக்கு அடைக்கலம் தந்தது ஒரு பிளாட்பார்ம் தான். ஒரு சமயம் அதே கம்பெனியில் மூட்டையும் தூக்கியிருக்கேன். தூங்குறதுக்கு சரியான இடமில்லாம லோடு மூட்டைகள் மேல தூங்கியிருக்கேன்.” என்று சொல்லி தனது சோதனைக்காலத்திற்கு ஒரு கமர்சியல் இடைவேளை விட்டார் ராஜா. திருப்பூரிலிருந்து திருச்சிக்கு எப்புடி? “திருப்பூர்ல வேலை செய்யும்போது இது எனக்கான வேலை இல்லங்கிற உள்ளுணர்வு மட்டும் அடிக்கடி இருந்ததுண்டு. பல நேரங்கள்ல என்னத்த படிச்சு கிழிச்சோம்னு நம்ம கல்வித் திட்டத்தின் மேல கோபப்பட்டதுண்டு. ஆனா வாழ்க்கையோட இன்னொரு பரிமாணத்த எனக்கு அடையாளம் காட்டுனது திருப்பூர்தான். அதனாலேயே ரொம்ப சீக்கிரத்துல வெளிய வந்துட்டேன். பிறகு ஒரு சில வேலைகள் செஞ்சு, கடைசியா தெரிஞ்ச நண்பர் மூலமா திருச்சில இருக்குற ஒரு ஸ்கூல்ல கல்சுரல் இன்சார்ஜா சேர்ந்தேன். கடைசிவரை வாத்தியார் வேலை எதுவும் செய்யல. அங்கேயும் அந்த பசங்கள கலைப்போட்டிகளுக்கு தயார் படுத்துறதுதான் என் வேலை. எவ்ளோதான் படிச்சிருந்தாலும் எனக்கு கடைசியா சோறு போட்டது என்னவோ நான் சிறு வயசுல இருந்து கலந்துகிட்ட கலைப்போட்டிகளுக்கான சான்றிதழ்கள்தான். இதுதான் என் வழின்னு முடிவாகிடுச்சு” என்று படபடக்கும் பங்காளி ராஜா, தனது கவிதைத் திறமையைக் காட்டி ஒரு பிரபல திரைப்பட இயக்குனரை கவர்ந்துள்ளார். இவரது கவிதையை சென்னையில் ஒரு எஃப்.எம். பேட்டியின்போது அவர் சொல்லியிருக்கிறார். இதை ராஜா தனது தாயோடு பகிர்ந்துகொண்டபோது, “உன் கவிதை எஃப்.எம்.க்கு போயிடுச்சு. நீயும் போகலாமேப்பா” என்று சொல்லியிருக்கிறார். தாய் சொல்லைத் தட்டாத ராஜா, ஹலோ எப்.எம். திருச்சியில் ஆட்கள் தேர்வு நடத்தியபோது, ஆயிரக்கணக்கில் குவிந்த போட்டியாளர்களில் தனித்துவம் பெற்ற ஒருவராக தேர்வானார். திருச்சிக்கு பங்காளி கிடைச்சு இரண்டு வருஷமாச்சு. எப்புடி இருக்கு இந்த வேலை? ”உண்மையில ரொம்ப மனநிறைவோட இருக்கேன். இந்த வேலையில கிடைக்கிற பணத்தைவிட, பேருதான் ரொம்ப அதிகம். இன்னைக்கு எல்லோருமே என்ன அவங்க வீட்டுப் பையனா ஏத்துக்கிட்டிருக்காங்க. ரொம்ப எமோஷ்னலா என் மேல பாசம் வைக்குறாங்க.” அதெல்லாம் இருக்கட்டும் சார். இந்த வேலை நிரந்தரமில்லங்கிற ஒரு எண்ணம் பலருக்கும் இருக்கே. இதப்பத்தி?.. “இத வேலையா மட்டும் பார்க்காம பலரோட சங்கடங்களை மறக்கவச்சு, சிரிக்கவைக்குற , ரசிக்கவைக்குற ஒரு சேவையாதான் பார்க்கணும். நிச்சயமா தெறம இருக்குறவங்க ஒரு கவர்மெண்ட் ஆபிஸரவிட ரொம்ப நிரந்தரமா இந்தத்துறையில செட்டிலாக முடியும். இதுலயும் பிரமோஷன் உண்டு. இன்கிரீமெண்ட் உண்டு. எல்லாத்தையும்விட எந்தத் துறையிலயும் கிடைக்காத பேரும், புகழும் இதுல மட்டும்தான் கிடைக்கும்.” என்று சொல்லி அசரவைத்தார். வேலையையே சேவையாகக் கருதும் ராஜாவுக்கு, ஒரு சேவை முகமும் இருக்கிறது. கிராமப்புற மாணவர்கள் பலருக்கு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக உதவுகிறார். இந்தியா முழுவதும் இருந்து பல அகாடெமிக்கலிலிருந்து புத்தகங்களைப் பெற்று இந்த மாணவர்களுக்குத் தருகிறார். மேலும் இவர்களுக்கான ஆங்கில அறிவையும் வளர்க்க உதவுகிறார். கிராமத்திலிருந்து நகரம் வந்து ஆங்கிலம் பேச முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இலவசமாக ஒரு பயிற்சி மையம் அமைப்பதே இவரது லட்சியமாம். இவர் தொகுக்கும் நிகழ்ச்சியின்போது திருச்சியின் அடிப்படைப் பிரச்சினைகளை அவ்வபோது விவாதிக்கிறார். பல அதிகாரிகளும் இவரது நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்பதால், பல பிரச்சினைகளும் மாநகராட்சியால் தீர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ”ஏதாவது நிகழ்வுகள் உங்களை பெருமைப்பட வைத்ததுண்டா?” “நிச்சயமா.. ஒரு முறை ஒரு பார்வையற்ற பெண் ஸ்டூடியோவுக்கு வந்தாங்க. என்னோட கைய தொட்டதுமே சந்தோஷத்துல பயங்கரமா அழுதாங்க. அதுக்கப்புறம் ரொம்ப நேரம் என்கிட்ட பேசிட்டு போனாங்க. இது முகம் தெரியாதத் துறைங்கிறதால, பல நேரங்கள்ல என் முன்னாடியே என் ஷோவப்பத்தி திட்டினவங்களுமுண்டு, பாராட்டினவங்களுமுண்டு” என்று சொல்லி பிளாஸ்பேக்குக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தார் ராஜா. “புதிய தலைமுறையினருக்கு என்ன சொல்றீங்க?” “பெற்றோர்கள் குழந்தைகளோட கல்வியல்லாத திறமைகளையும் ஊக்கப்படுத்துங்க. என்கூட படிச்சவங்கள்ல ஒரு சிலர் ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்களவிட நான் இருபது மடங்கு அதிகமா சம்பாதிக்கிறேன்னா அதுக்குக் காரணம், எனக்குள்ள இருந்த உள்வளத் திறமைதான். ஆனா இப்போதெல்லாம் ஆண்டு விழா மட்டும்தான் திறமையை காண்பிக்க ஒரே களம் என்கிற நிலை உள்ளது. பாடங்களுக்கு இருப்பது போல திறமைகளுக்கும் ஒரு தனி வகுப்பே நடத்தவேண்டும் என்பதே என் ஆசை. என் வெற்றிக்குக் காரணமான ஒருவொருத்தருக்கும் என்னோட நன்றிகள்” என்று சொல்லும் ராஜா திருச்சியின் ஒவ்வொரு வீட்டிலும் பாசத்தை பங்குபோட்டுக் கொண்டிருக்கிறார், “பாசக்காரப் பங்காளியாக..” நீங்களும் கிராமப்புறத்திலிருந்து சிவில் சர்வீஸ் எழுத விரும்புபவரா? உதவிக்கு – attitude.vel@gmail.com

Tuesday, June 15, 2010

தேர்வில் தோல்வி? வாழ்ந்தால் வெற்றி..!

”படித்தவர்கள் பாடம் நடத்துகிறார்கள். படிக்காதவர்களோ பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்.” இதுதான் நமது இன்றைய உலகின் நிதர்சன உண்மை. தேர்வில் தோல்வியடைபவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவதும், தேர்வை வென்றவர்கள் ஒரு சில காரணங்களால் வாழ்வில் தோற்பதும் இயற்கையே. படிப்புதான் வாழ்வாதாரம், அது சரியாக அமையாவிட்டால் வாழ்வே அவ்வளவுதான் என்பதெல்லாம் மாயைதான். பத்தாவது மற்றும் +2 தேர்வுகள் நம் திறமைக்கான மடிப்பீடு கிடையாது. அது நமக்குள் இருக்கும் ஞாபகசக்தியையும், விஷயத்தை உள் வாங்கும் திறனையும் மதிப்பீடு செய்வதே ஆகும். உள்வளத்திறமைக்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. கல்வி கனவாய் போயினும் திறமையை மட்டுமே கொண்டு இன்று சிகரம் தொட்டிருக்கும் ஒரு மனிதரைத்தான் சந்திக்க இருக்கிறோம். வீட்டில் நான்கு கார்கள், வீடு முழுவதும் ஏ.சி., இதுதான் பணக்காரர்களுக்கான பொதுவான அடையாளக் குறியீடுகள். இவரிடமோ நூற்றுக்கணக்கில் கார்கள், அத்தனை வகையான ஏ.சி.க்கள். மலைத்துப் போக வேண்டாம். இவை அனைத்துமே விற்பனைக்குத்தான். சென்னை ஆதம்பாக்கத்தில் உயர்ந்து நிற்கும் “சக்தி கார்ஸ்” உரிமையாளர் சக்திவேல் அவர்களை சந்தித்தோம். தஞ்சாவூர் மாவட்டம் ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் பிறந்த இவர் படித்ததோ ஒன்பதாம் வகுப்பு வரைதான். இன்று வணிகத்தின் உச்சாணிக்கொம்பிலிருக்கும் இவர் முதன் முதலாக ஒரு சோடா கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாராம். அன்றைய இவரது வருமானம் நாளொன்றிற்கு 50 பைசா. இதில் தொடங்கிய இவரது பயணம் திசையறியாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு புதுக்கோட்டையில் மாதம் 240 ரூபாய் வருமானத்தில் ஒரு வேலை கிடைத்தது. இதில் திருப்தியடையாததால் அந்த காலகட்டத்தில் டிரைவிங் லைசன்சு மட்டும் இருந்தால் டிரைவர் வேலை உறுதி என்கிற சூழ்நிலை நிழவியதை உணர்ந்தார். இதற்காக தனது சம்பளத்தில் மாதம் 60 ரூபாய் வரை மிச்சம் பிடித்து, பத்து மாதங்கள் முடிவில் ரூ.600 செலுத்தி டிரைவிங் லைசன்சு பெற்றிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஒரு லாரியில் கிளீனரானார். தொடர்ந்து ஓட்டிப் பழகி லாரி டிரைவராகவும் பிரமோஷன் பெற்றிருக்கிறார். ஆனால் இந்தத் தொழிலிலும் வெறுமையே மிஞ்ச, ஒரு காருக்கு டிரைவராகலாம் என ஆசைப்பட்டு கார் டிரைவராக பணியைத்தொடர்ந்தார். அப்போது சும்மா இருக்காமல் கிடைத்த வருமானத்தில் இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பி.ஏ. லிட்ரேச்சர் படித்துத் தேறி இருக்கிறார். பின்னர் கார் டிரைவர் எனும் நிலையைத் தாண்டி வர எண்ணி சொந்தமாக ஒரு காரை வாங்கி சக்தி கேப்ஸ் என்ற பெயரில் ஒரு டிராவல்ஸ் ஆரம்பித்திருக்கிறார். அந்த நேரம் கார்களின் கட்டமைப்புகள், மெக்கானிஸம் குறித்த தெளிவான யோசனை இல்லாதலால் இவர் வாங்கிய இரண்டு கார்களும் கோளாராகி இவருக்கு நஷ்டம் லட்சங்களைத் தொட்டது. தோல்வியால் துவளாத இவர், இந்த நஷ்டத்திற்கான காரணியை அலசி ஆராய்ந்தபோது, கார் மெக்கானிஸம் தெரியாத தனது அறியாமையையே நொந்து கொண்டுள்ளார். பின் தானே முன் வந்து கார்கள் குறித்த அத்தனை நுணுக்கங்களையும் கற்று, தன்னைப்போல் மெக்கானிஸம் தெரியாமல் கார் வாங்குவோரின் நலனைக்கருதி தானே கார்களை வாங்கி விற்க முடிவு செய்தார். அன்று எடுத்த முடிவுதான் இன்று “சக்தி கார்ஸ்” என்னும் பெயரில் ஓங்கி வளர்ந்திருக்கிறது. தற்போது பூமி வெப்பம் அடைவதால் மக்களின் அடுத்த அத்தியாவசியத் தேவையாக மாறி வரும் ஏ.சி.களை விற்கவும் முடிவு செய்து தொழிலைத் தொடங்கியுள்ளார். நாளுக்கு 50 பைசா என்கிற ரீதியில் தொடங்கிய இவரது தொழில் பயணத்தில் இன்று இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா? நாளொன்றிற்கு கிட்டத்தட்ட ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை. இந்த உச்சத்தைத் தொட இவருக்கு உதவியது எது என்று கேட்டோம். “எனது முன்னேற்றத்தில் எந்த ஒரு இடத்திலும் எனக்கு குரு என்று யாருமே இருந்தது கிடையாது. நான் எந்த ஒரு வேலையிலும் தன்னிறைவு பெறாமல் முயன்றதால்தான் தொழில் முனைந்தேன்..தொழில் முனைகிறேன்.. இன்னும் அதிகமாக தொழில் முனைவேன்”என்று சொன்ன இவரிடம், ”நீங்கள் சந்தித்த மிகப்பெரிய சோதனை ஏதேனும் உண்டா?” என்று கேட்டோம். “தொழில் என்று வந்துவிட்டாலே தினம் தினம் சோதனைதான். நான் சொந்தமாக கார்கள் வாங்குவதற்கு முன்பாக பணம் சேர்க்கும் ஆசையில் சில காலம் சிங்கப்பூரில் கட்டிடக் கூலி வேலை செய்தேன்.ஒரு முறை எனக்கு அம்மை நோயின் தாக்கம் இருப்பதாக தெரிய வந்தது. ஒரு மாத விசா மட்டுமே மீதமிருந்த நிலையில் டிரீட்மெண்டிற்குக் கூட வெளியே செல்லமுடியவில்லை. வேப்பிள்ளை, லெமன், என்று எதுவுமே கிடைக்காத பட்சத்தில் உடல் முழுவதும் சீல் வடிந்துகொண்டிருந்தது. அங்கு ஒரு வெள்ளிக்கு ஒரு சட்டை என்கிற வீதம் தினமும் ஒரு சட்டையை அணிந்து சமாளித்துகொண்டிருந்தது இன்று நினைத்தாலும் தாங்கமுடியாத வேதனைதான். இருப்பினும் பொருள் சம்பாதிக்கப்போன ஒரே காரணத்தால் அத்தனையையும் பொறுத்துகொண்டேன்” என்று தனது சோதனையான அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். சம்பாதிப்பதோடு நிறுத்திவிடாமல் அதை பல சேவைகள் மூலம் பயனுள்ள வகையில் செலவு செய்கிறார் சக்திவேல். இவர் தனது சொந்த ஊரான ஆர்.சுத்திப்பட்டு கிராமத்திற்கு ஒரு பெரிய நூலகத்தை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்த நூலகத்தில் 10,000 புத்தகங்கள் வரை இருக்கின்றன. இதே ஊருக்கு நுழைவு வழைவு, தண்ணீர்த் தொட்டி, மாணவர்க்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இவர் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும்கூட பல காரணங்களால் பிரிந்து கிடந்த தனது கிராமத்துத் தெருக்களை இணைக்க இருக்கின்ற ஒரே வழி கோயில் தேரோட்டம்தான் என்பதை மனதில்கொண்டு தனது செலவிலேயே தேரோட்டத்தை எடுத்து நடத்தியிருக்கிறார். மேலும் தன்னால் படிக்கமுடியாவிட்டாலும், வறுமையின் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் இருக்கும் பல மாணவர்களுக்கு கல்விச் செலவைத் தானே ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு சென்னையில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதுவரை இவறால் பயன்பெற்றுள்ளனர். ”மாணவர்களுக்கு உதவி செய்வதை விட, நம்மால் உதவி பெற்ற மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சிபெறும் செய்தி கிடைக்கும்போதுதான் உண்மையான ஒரு தன்னிறைவு கிடைக்கிறது” என்று குறிப்பிடுகிறார். மேலே நாம் பார்த்துவரும் இந்த ஆர்.சுத்திப்பட்டு சக்திவேல் அவர்களுக்கு இன்னொரு வெற்றுத்திருமுகமும் உள்ளது. கவிமுகில் என்கிற தனது புனைப்பெயரில் கவிஞர்.தாராபாரதி அவர்களை மானசீக குருவாகக் கொண்டு இவர் பல கவிதை, ஹைக்கூ, நாவல், சிறுகதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். இலக்கியத்துறையில் புகழ் பெறுவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கும் இவர், இதே துறையில் நலிவடைந்த அறிஞர்களை கவுரவித்து உதவிகளும் செய்து வருகிறார். வருடந்தோறும் இவர் நடத்திவரும் தாராபாரதி அறக்கட்டளை சார்பாக சிறந்த நூல்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இவரது எழுத்திற்கு அங்கீகாரமாக அமெரிக்காவில் உள்ள இயல் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தில் இவரது ஒரு படைப்பு மொழி பெயர்க்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரிடம் ”தேர்வில் ஏற்படும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது?” என்று கேட்டோம். “தேர்வில் வெற்றிபெற்றவர்களைவிட தோல்வியடைபவர்கள்தான் வாழ்க்கையை நிறைய உணர முடியும். வாழ்வின் ஏணிப்படிகள் உங்கள் கால்களுக்காக காத்திருப்பதை உணருங்கள்.நம் மீது நாமே கவனம் செலுத்த ஒரு வாய்ப்பாகவே தோல்வியைக்கருதுங்கள். பெற்றோர்களும் அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளோடு தங்கள் குழந்தைகளை ஒப்பிடுதலை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. ஏனென்றால் என்னோடு படித்த பலரும் டிகிரி முடித்தனர். ஆனால் இன்று அவர்கள் 20,000 முதல் 30,000 தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் நானோ இன்று லட்சங்களை ஈட்டுகிறேன்.” என்று சொல்லி நம்மை வியக்கவைத்தார்.இவர் இயக்கியிருக்கும் “எதிரே உன் ஏணி” எனும் குறும்படத்தில் முதல் காட்சியிலேயே பேங்காக்கில் வசிக்கும் ஒருவரது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த நபருக்கு இரண்டு கால்களும், கைகளும் கிடையாதாம். இருப்பினும் யாருடைய உதவியும் இல்லாமல் அவரால் இயங்க முடிகிறதாம். வெருங்கை என்பது மூடத்தனம். பத்து விரல்கள்தான் நம் மூலதனம் என்னும் புதுமொழியை சொல்லி நமக்குள் நம்பிக்கை விதை தூவினார். வணிகம், சேவை, எழுத்து எனும் மூன்று குதிரைகளில் வெற்றிகரமாக பயணம் செய்யும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது தோல்வியில் துவளாமை மட்டுமே. “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?” – வெற்றிகொண்டார்களின் பயணம் தொடரும்…..

ஒரு வித்தியாசமான வினாடி வினா...

நீங்கள் மிகச் சிறந்த பொது அறிவுச் செம்மலா? பின் வரும் கேள்விகளுக்கு விடை கொடுங்கள் பார்ப்போம்.

# கடைசி ஐந்து முறையாக உலக அழகி பட்டம் வென்றவர்களின் பட்டியல்?

# கடந்த ஐந்து வருடங்களாக சாகித்ய அகாடெமியின் விருது பெற்றவர்கள் யார் யார்? புக்கர் பரிசு பெற்றவர்கள் யார் யார்?

# கடந்த ஐந்து வருடங்களில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்கள் யார் யார்?

# கடந்த ஐந்து வருடங்களாக நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியல்?

இதை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படாதீர்கள். பின் வரும் வினாக்களுக்கு விடை கொடுக்க முடிகிறதா என்று பாருங்கள்.

# உங்கள் பள்ளிகால நண்பர்கள் ஐந்து பேரை பட்டியலிடுங்கள்.

# பல இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவிய ஐந்து பேரின் பெயர், விவரங்கள்?

# உங்கள் முதல் காதல், காதலியின் விவரம், அவரது அன்றைய முகவரி, ஃபோன் நெம்பர்.

# உங்களுக்கு உறுதுணையாய் இருந்த ஆசிரியர்கள் பெயர்கள் ஐந்து.

# உங்களை தூக்கி வளர்த்த, அறிவுரைகள் தந்த ஐந்து சொந்தக்காரர்களின் பெயர்கள்.

இது பதில் சொல்ல எளிமையான வினாக்கள் என்று நினைக்கிறீர்களா? உண்மை அதுவல்ல. நம் நினைவில் நிற்கும் ஒவ்வொருவருமே அவர் பெற்ற புகழாலோ, பெயராலோ, பெற்றப் பொருளாலோ பதிவதில்லை. மாறாக அவர்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் காட்டிய அன்பும், அக்கறையும்தான் அவர்கள் நீங்காத இடம்பிடித்திருக்கக் காரணம். நாமும் பலர் மனதில் பதிய, உற்றோரை அரவணைப்போம், அன்பாய் இருப்போம்.

Saturday, June 5, 2010

பெண் சிங்கம்- விமர்சனம்

பெண் சிங்கத்த பேப்பர்ல பார்த்திருப்பீங்க, கலைஞர் டிவில பார்த்திருப்பீங்க, போஸ்டர்ல பார்த்திருப்பீங்க, கட்சிக்காரங்களோட பேனர்ல பார்த்திருப்பீங்க.. ஆனா கம்பீரமா தியேட்டர்ல ஓடி பார்த்திருக்கீங்களா? பிளீஸ் அந்த விபரீத ஆசை மட்டும் வேணாம்.. பார்த்துடாதீங்க.. இந்தப் படத்த பார்த்தபின்தான் எனக்குப் புரிஞ்சுது சுறா எவ்வளவு உத்தமமான படைப்புன்னு..

படத்தோட டைட்டில் கார்டில் மீரா ஜாஸ்மின்,விவேக்,ரோகிணி, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ராதாரவி என பல தேர்ந்த நடிகர்களின் பெயர்கள், பாடலாசிரியர்கள் கலைஞர், பாரதிதாசன், வாலி, பா.விஜய் , சிறப்புத் தோற்றம் லாரன்ஸ், லட்சுமி ராய், ரம்பா, எழுச்சி நாயகன் ஜே.கே.ரித்தீஷ், என்று ஒரு பிரமிப்புப் பட்டாளமே அணிவகுத்திருந்தது. ஆனா கொக்கமக்கா ஒருத்தருக்கூடவா கதைய கேட்கல?

கலைஞரோட செம்மொழித் தமிழ் வசனம் ஓகே. ஆனா எந்த இடத்துல நல்லத் தமிழ் பேசுறது, எந்த இடத்துல கலப்புத் தமிழ் பேசுறதுங்கிற குழப்பம் தலைவருக்கே ரொம்ப அதிகமா இருந்திருக்குது. மேட்டர் மாலா, மேயாத மான், ரூம்க்கு போலாமா, ஒரு ரவுண்டு அடிக்கலாமா, வைரம் பாஞ்ச கட்ட ஆகிய வார்த்தைகள் கலைஞரின் சொற்களஞ்சியத்திலிருந்து விழுந்ததுதானா? சந்தேகம் வருது..

சென்னை சங்கமத்துல ஆரம்பிச்சு, கலைஞரின் தாய் காவியம், கலைஞரின் வீரமங்கை வேலு நாச்சியார், கலைஞரின் உதய சூரியன் என்று படம் முழுக்க கட்சி விளம்பரமே அதிகமாத் தெரியுது. பேசாம இதக் கொள்கை விளக்கக் குறும்படமா கட்சியே வெளியிட்டிருக்கலாம்.

விவேக் படம் முழுக்க வந்தாலும் மரணமொக்கைப் போடுகிறார். அவரதுப் பயணத்தில் இதுவும் மிகப்பெரிய சறுக்கல்தான் பாவம். ( கலைஞர் டிவில இவர் பேசுனதப் பாத்து ரொம்ப எதிர்பாத்து ஏமாந்துட்டேன் )

பாடல்கள் சுமார் ரகம் என்று சொன்னால் நாக்கே அழுகிடும். அவ்வளவும் அப்பட்டம். “வீணையில் வருவது வேணு கானமா?.. திருவாவடுதுறை தோடி ராகமா” பாட்டுக்கு வெளிநாட்டு லொகேஷன் ஒட்டவேயில்லை. ஹீரோவின் நடனம் யாருக்கு யாரோ ஸ்டெப்னியை நினைவுபடுத்துகிறது. பட்ஜெட் படம் என்பதால் லொகேஷனிலேயே ஆள் பிடித்திருக்கிறார்கள் நடனமாட.. எல்லாமே சுமார் 50 வயதுக்குக் குறையாதக் கிழவிகள். ஒரு பாட்டில் லிப் கிஸ், டூ பீஸ் என்று பட்டையைக்கிளப்புறாங்க. லாரன்ஸ்-லட்சுமிராய் கூட்டணி கடைமைக்கு ஒரு குத்தாட்டம் போட்டிருக்கு.

எல்லாம் ஓகே கதை என்னனு கேட்குறீங்களா? அதப்பத்திதான் டைரக்டரே கவலப்படலியே.. நாம எதுக்குப் பேசிகிட்டு? பெண் சிங்கம்னு பேர் வெச்சதால மீரா ஜாஸ்மின்தான் வெயிட், நிச்சயமா ஹீரோயின் சப்ஜெக்டா இருக்கும்னு யாராவது கெளப்புனா, செவுனியோட சேர்த்து ஒண்ணு விடுங்க. படத்துல எல்லாத்தையும் ஹீரோவே செய்வாரு. கடைசியா நம்ம பெண் சிங்கம் போலிஸ் டிரெஸ்ல வந்து சுடுவாங்க. அவ்ளோதான்.

எந்த மொக்கைப் படத்துக்கும் தூங்காத என்னையே செகண்ட் ஆஃப் கொஞ்சம் அசத்திடுச்சுங்க. தலைவர் ரித்தீஷ் வந்ததுமே தியேட்டரில் குதூகலம். ஆனா அவர் பருப்பும் வேகாமல் போனதுதான் பரிதாபம். உண்மையில் படத்தின் பெண் சிங்கம் ரோகிணிதான். செகண்ட் ஆஃப் அம்மணிய நம்பித்தான்.

படம் முழுக்க லிப் சிங்க் சகிக்கல. செம்மொழி பேசும் எல்லோருமே மாவுதான். செளராஷ்ட்ரானு நினைக்குறேன். வைரமுத்து- தமிழச்சியின் வாய்ஸில் வீரமாய் ஒளிக்கும் ஓரங்க நாடகம் சீன் உயிரே இல்லாத உடலாய் உறுத்துகிறது. ”சிங்கத்துல பெண் சிங்கம் உண்டுன்னுத் தெரியும். ஆனா பெண்கள்ல சிங்கம் உண்டுன்னு நிரூபிச்சுட்ட”- இதுதான் கிளைமேக்ஸ் பஞ்ச். எப்புடி?...

ஆகமொத்தம் உங்களுடைய நீண்டகால எதிரிகளை பழி வாங்க சரியான தருணம் இதுதான். உடனடியா பெண் சிங்கம் டிக்கெட் எடுத்து குடுத்துடுங்க. கூண்டோட காலி. எனக்கும் ஒரு சண்டாலன் டிக்கெட் எடுத்து குடுத்து கவுத்துட்டான்.

ஓசியில டிக்கெட் கிடைச்சா எந்த படத்தயும் பார்க்கலாம்னு நினைக்குற என்னமாதிரி ஆளுங்களுக்கு பெண் சிங்கம்- கடித்துக் குதறும்.