Saturday, May 8, 2010

ஒரு பள்ளியின் கதை..

ஒரு பள்ளியின் கதை

நண்பர் ஒருவரின் தூண்டுதலால் மலைக்கோட்டை மாநகரில் இருக்கும் தஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளிக்கு ( சேவா சங்கம் ) பயணப்பட்டோம். அரசு உதவி பெறும் இந்த பள்ளியில் இருக்கும் பல விஷயங்களையும் பார்க்கும்போது, பள்ளி என்பதையும் தாண்டி இதை இன்னொரு தாய் வீடு என்றே சொல்லத் தோன்றுகிறது. நாம் பார்த்த ஒவ்வொரு வகுப்பிலும் சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர். என்னதான் நடக்கிறது இங்கே? என்று வியந்த நம்மிடம், காரணங்களை அடுக்கினார்கள் ஆசிரியப்பெருமக்கள். “பெரும்பாலும் எம் பள்ளியில் படிப்பவர்கள் கூலித்தொழில் செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே. அவர்களின் பெற்றோருக்கு குழந்தைகளை சோரூட்டி, சீராட்டி, அனுப்புவதற்கு மனதிலும், உடலிலும் வலு கிடையாது. தலைவாரி சிண்டு முடியக்கூட இயலாத நிலையில் இந்த குழந்தைகள் பள்ளிக்கு வரவே வெட்கப்பட்டனர். இதை அறிந்த நாங்கள், பள்ளிக்கு வந்த பிறகு அவர்களை அலங்கரிக்கச் செய்தோம். “ஆரோக்கியச் சக்கரம்” ஒன்றை அமைத்து ஆசிரியர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மாணவரின் சுகாதாரத்தையும் கண்காணிக்கிறோம். காலையில் பசியின் பிடியில் மாணவர்கள் போராடியதை நேரில் பார்த்திருக்கிறோம். அதன் விளைவாகவே காலை உணவு வழங்கும் “சமுதாய காலை உணவு திட்டம்” செயலாக்கப்பட்டது. பல இடையூறுகளையும் கடந்து இதை தமிழகத்திலேயே முதன்முறையாக 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தியது நாங்கள் தான்” என்று சொல்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். இதற்காக தினமும் ஆகும் செலவு ரூ.500/- . ஆரம்பத்தில் பல அரிசி மண்டி முதலாளிகளையும், காய்கறி வியாபாரிகளையும் சந்தித்து இந்த பணத்தை நன்கொடையாக பெற்றுள்ளனர். நன்கொடை வசூலிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்ற போதிலும் மாணவர்களின் பசியைப் போக்கவே, குழந்தைக்காக போராடும் தாயைப்போல, விடுமுறை நாட்களில் கூட அலைந்து திரிந்து வசூல் செய்திருக்கிறார்கள் இப்பள்ளி ஆசிரியைகள். இவர்களைத் தொடர்ந்து இன்று திருச்சி முழுவதும் 38 பள்ளிகள் இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறார்கள். சுமார் 2800 மாணவர்கள் பலன்பெற்று வருகிறார்கள். சமீபத்தில் கோவை மாநகராட்சி தனது கட்டுபாட்டிலுள்ள அத்தனை பள்ளிக்கூடங்களுக்கும் இந்த காலை உணவு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பள்ளியில் “போஸ்ட் பாக்ஸ்” ஒன்றும் உள்ளது. தொலைத்தொடர்பு அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில் கடிதப் போக்குவரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. இருப்பினும் கடிதம் எழுதுதலில் இருக்கும் தன்னிறைவை மாணவர்கள் உணரும் பொருட்டு,இந்த அணுகுமுறை கொண்டுவரப்பட்டதாம். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் , பெற்றோருக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் கடிதங்கள் எழுதி போஸ்ட் செய்கிறார்கள். இந்த கடிதத்தில் இருக்கும் மாணவர்களின் மழலை மொழிநடை நம் மனதை பெரிதும் கவர்கின்றது. குழந்தைகளின் ஆங்கில அறிவை வளர்க்கும் பொருட்டு, “வால் டிக்‌ஷ்னரி ( சுவர் அகராதி )” எனப்படும் ஒரு முறை பின்பற்றப்படுகிறது. இந்த பள்ளியில் இருக்கும் ஒன்றாவது, இரண்டாவது பிள்ளைகளின் ஆங்கிலப் புலமைக் கூட நம்மை வியக்கவைத்தது. தங்களது பள்ளிக்கு போட்டியாக அவர்கள் கருதுவது, ஆயிரங்களை அசால்ட்டாக விழுங்கும் ஆங்கில மீடியம், கான்வெண்ட் பள்ளிகள்தானாம். அவர்களுக்கு நிகராக தம்மாலும் கல்வியை இலவசமாகவும், தரம் கொண்டதாகவும் தரமுடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள் இப்பள்ளி நிர்வாகத்தினர் இலவசக் கல்வி மட்டுமல்லாது, சீருடைகள், நோட்டு, பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஸ்லேட் என அத்தனையையும் இலவசமாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றனர். இந்த வெயில் காலங்களில் சில குழந்தைகள் காலணி அணிய வசதியில்லாமல் வெறும் காலோடு பள்ளிக்கு வருவதைக்கண்டு, அனைத்து குழந்தைகளுக்கும் செருப்பு வாங்கி கொடுத்துள்ளனர் ஆசிரியர்கள். ஆங்கில வாசிப்புப் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலிஷ், கையெழுத்துப் பயிற்சி, வாய்ப்பாடுப் பயிற்சி, என அனைத்திலும் மாணவர்களை மெருகேற்றுகிறார்கள். செயல்வழிக்கல்வி (Activity Based Learning) சிறந்த முறையில் செயலாக்கம் பெற்றிருப்பதே இந்த பள்ளியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாக குறிப்பிடப்படுகிறது. இந்த கல்வி முறையில் நன்கு படிக்கக்கூடிய மாணவர், சுமாராக படிக்கும் மாணவர் , மிகவும் சிரமப்பட்டு படிக்கும் மாணவர் என அனைத்து மாணவர்களும் எளிதில் கற்கமுடிகிறதாம். தொடர் விடுப்பிலிருக்கும் மாணவரும் கூட எந்த பாடத்தையும் விட்டுவிடாமல் கற்கமுடிகிறதாம். கல்விக்கொலு , சமூகவியல் கண்காட்சி, கோடை சிறப்பு மருத்துவ குறிப்பு வழங்கும் முகாம், கோலப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி என்று பல்வேறு புதிய சிந்தனைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் இப்பள்ளி ஆசிரியைகளின் சமீபத்திய புதிய முயற்சி பெரிதும் போற்றலுக்குரியது. எத்தனை வசதிகள் செய்து தரப்பட்டாலும் கல்வியின் முக்கியத்துவத்தை உணராத பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை. இதை அவர்களுக்கு உணர்த்தவே வீடுகள் தோறும் சென்று கல்வியின் அவசியத்தை தெரியப்படுத்தி, மாணவர்களை ஸ்பாட் அட்மிஷன் முறையில் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள், இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகள். ”சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரப் பயணத்தின் விளைவாக, 45 மாணவர்கள் இதுவரை சேர்க்கப்பட்டுள்ளனர். எங்கள் பயணம் முடியும் போது குறைந்தபட்சம் 100 மாணவர்களையாவது சேர்த்துவிடுவோம்” என்று அருதியிட்டு சொல்கிறார்கள் ஆசிரியைகள். பொதுவாக இவர்கள் தேர்ந்தெடுப்பது அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகள்தான். திருச்சியில், பெரிய மிளகுபாறை, சின்ன மிளகுபாறை, கண்டோன்மெண்ட், பீமநகர், வண்ணாரப் பேட்டை, பொன்னகர், கோரிமேடு, செல்வம் நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் ஸ்பாட் அட்மிஷன் நடத்தப்பட்டுள்ளது. ஆசிரியைகள் பெற்றோரை சந்தித்த மிளகுபாறையில் நாமும் ஆஜரான போது, சூரியன் 106 டிகிரி வெப்பத்தை கக்கிக் கொண்டிருந்தது. இதை சற்றும் பொருட்படுத்தாத ஆசிரியைகள், மிகவும் கூலாக பெற்றோருக்கு தொடக்கக் கல்வியின் தேவையை அறிவுறுத்திகொண்டிருந்தனர். அவர்களின் சரியான அணுகுமுறை காரணமாக, நம் கண் முன்னரே இரண்டு மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அவர்களின் பெற்றோரை அணுகியபோது, “ ஆசிரியைகள் வீடு தேடி வருவதால் நாங்கள் அவர்கள் சொல்வதை கவனமாக கேட்கிறோம். எங்கள் வீடு தேடி வந்து, எளியோராகிய எங்கள் குழந்தையை தங்கள் குழந்தையாக நினைத்து பேசும்போது எங்களுக்கு ஒரு தெளிவும், வாழ்வில் ஒரு தெம்பும் கிடைக்கிறது. அதனாலேயே எங்கள் பிள்ளையையும் பள்ளியில் சேர்த்துள்ளோம், “ என்று உணர்வுப்பூர்வமாக தங்கள் நன்றிகளை பதிவு செய்தனர். அனைவருக்கும் கல்வி திட்ட செயல்பாட்டில் மாநிலத்திலேயே சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இருக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியை விசாலாட்சி அவர்களை சந்தித்தோம். அவர் பேசுகையில், “ எங்கள் பள்ளியின் ஒவ்வொரு புதிய செய்கையிலும் பல்வேறுவிதமான நடைமுறை அசாத்தியங்கள் இருப்பதுண்டு. ஆனால் அவை அனைத்தையுமே எம் ஒவ்வொருவரின் அயராத தொண்டுள்ளத்தோடு கூடிய உழைப்பின் காரணமாக வெற்றிபெறச் செய்வோம். சிறப்பான கணிப்பொறி வசதியும், வாகன வசதியும் கிடைக்கப்பெற்றால் எங்கள் மாணவர்களுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும். அதை பெறுவதற்கான முயற்சிகளில் தற்போது இறங்கி இருக்கிறோம். “ என்று கூறினார். இவர் நல்லாசிரியருக்கான “டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது” பெற்றிருக்கிறார். மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த ஆர்.லட்சுமி, மாலதி உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்கள், சிறந்த ஆசிரியை , அரப்பணிச்செம்மல் ஆகிய விருதுகளை வென்றுள்ளனர் என்பது கூடுதல் பெருமைக்குரிய விஷயம். இத்தனை புதிய முயற்சிகளுக்கும் தூண்டுகோளாகவும், ஐடியாக் களஞ்சியமாகவும் இருக்கும் நபர் திரு.எஸ்.சிவக்குமார் அவர்கள். இவர் ஒரு கல்வி தன்னார்வளர், குமுழூர் அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தின் முதுநிலை விரிவுரையாளர். இவரிடம் இதைப்பற்றி கேட்டபோது “இன்று கல்விகற்போர் சந்திக்கும் சவால்கள் அதிகமாகியுள்ளன. இவற்றிற்கு விடைகாண நம்மால் மட்டுமே முடியும். நாம் நமது சுற்றுவட்டார சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தில் பங்கெடுத்தலே கல்வி மேம்பாட்டிற்கான வித்து” என்று தனது அனுபவப் பகிர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஆகமொத்தம் நம் தலையங்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இந்த பள்ளியின் பணிகளுக்கு வித்தாய் இருக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளத்திற்கும் பாராட்டுக்களை உறித்தாக்குவோம். ஒவ்வொரு பள்ளியும் இதை பின்பற்றட்டும்..

” ஏட்டில் இயற்றிய உரிமைச் சட்டம்

நாட்டில் நிகழ - அடைவோம் உயர் மட்டம் “