
”படம் உங்களை சுத்தமாக்கும்” – தனுஷ், “பார்க்கும்போதே ஏதோ பண்ணும்”- ஜி.வி.பிரகாஷ், “இது எல்லாமே கலந்த ஒரு விதமான மயக்கம்”- செல்வராகவன். இப்புடி அவங்க படத்த பத்தி அவங்களே பேசுனாலும், படம் பார்த்து முடிக்கும்போது இந்த பேச்சுத் தகும்னுதான் தோணுது. ஒரு புதிய வாழ்வியலை எடுத்துக்காட்டும் மிகையதார்த்த படைப்பு. இதுக்கு திரைக்கதை அமைத்த செல்வாவுக்கு பூங்கொத்து கொடுக்கலாமேயானால் இதற்கு கதைக்கருவை தந்த தனுஷுக்கு பூந்தோட்டத்தையே கொடுக்கலாம். திருட்டுகளிலேயே எச்சைத்தனமானது கற்பனைத்திருட்டு. இப்படம் பார்க்கும் அத்தனை கற்பனைத் திருடர்களுக்கும் இது இதமான செருப்படி.
படத்தின் முதல் பாதி மனித இயல்புகளும், இரண்டாம் பாதி அதையும் தாண்டிய மனித இறைச்சல்களுமாக பயணிக்கிறது. வாழ்வில் என்னவாக வேண்டுமென்ற கனவைத் தவிர வேறு பிற வஸ்துக்களே இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு குவாட்டர் ஊத்திவிட்டு எனர்ஜி கொடுத்திருக்குறாங்க. அந்தக் கனவுக்கூட இல்லாதவர்களுக்கு, பிரெண்டோட பிகர உஷார் பண்ணுறது எப்புடின்னு கிளாஸ் எடுத்திருக்குறதா வச்சுக்கலாம்.
படத்தோட மிகப்பெரிய பிளஸ் பிண்ணனி இசைதான். அதைவிட பிளஸ் பல இடங்களில் காணப்படும் சைலன்ஸ். இரண்டையுமே சரியாக கையாண்டிருக்கும் ஜி.வி., 7ஜி ரெயின்போ காலனி வாடையில்லாமல் இசைத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும். இந்தப்பாட்டு இப்புடித்தான் இருக்கும்னு நினைச்சு போகுற ரசிகர்களுக்கு பிகர மட்டும் எதிர்பார்த்திருக்கும்போது பிகரோட தங்கச்சியும் கூட வந்தா கிடைக்குமே ஒரு சந்தோஷம் , அந்த மாதிரி தான் படம்பிடிச்சு பரவசப்படுத்தியிருக்காங்க. தனுஷின் நடிப்பு நடிப்பாக ஒரு சில இடங்களில் தெறிந்தாலும், நடிக்காத இடங்களில்தான் தேசிய விருதுக்கு தெம்பு சேர்க்கிறார். தமிழ் வராட்டியும் நடிப்பு வருதுங்குற காரணத்துக்காகவாவது ஒரு கோயில், மசூதி, சர்ச் அட்லீஸ்ட் செம்மொழி பூங்காவாச்சும் கட்டலாம் ஹீரோயின் ரிச்சாவுக்கு. இப்படியொரு ஹீரோயின் காரெக்டர் செய்யுறதுக்கு ஏகத்துக்கும் தில்லு வேணும். அத செஞ்சு காண்பிச்சு கண்ணுக்குள்ளயே நிக்குதுபா அந்தப்பொண்ணு. படத்தின் கேமரா பார்க்கும் ஒவ்வொருவரையும் காமராமேனாக வேண்டுமென தூண்டுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு சாதாரண இளைஞனின் கதையை அசாதாரண ஸ்டைலில் சொல்லியிருப்பதும் மிகப்பெரிய பிளஸ்தான்.
மைனஸ் என்றால் எப்பொழுதும் போல் பெண்களை சுத்தி பின்னப்பட்டிருக்கும் வன்முறையும், வக்கிரமும் அதை மையமாக வைத்து கதையை சொல்லியிருக்கும் யூசுவல் செல்வராகவன் எலிமெண்ட் தான். முதல் பாதியில் ஒரு இட்த்துலகூட நெலிய வைக்கல என்றார் ஒரு நண்பர். கரெக்ட்தான் பட் அதுக்கும் சேர்த்துதான் செகண்ட் ஆஃப்ல கண்ணை மட்டுமல்ல சில இடங்கள்ல காதையும் சேர்த்தே பொத்திக்க வச்சுட்டாரே. அந்த அரை மணி நேர படத்தை செல்வாவுக்கு நிகரான நல்ல டைரக்டரொருவர் இயக்கியிருந்தால். அதையும் ரசித்திருக்கலாமோ என்னவோ தெரியவில்லை, போதும்டா சாமி நீங்க நிஜத்த நிஜமா காண்பிச்சது என்று கதரவிடுறாங்கப்பா. இன்னொரு மைனஸ் கண்டிப்பாக கிளைமாக்ஸ் . இது கிட்டத்தட்ட 1745 தடவையாவது சினிமாவில் வந்திருக்கும் கிளைமாக்ஸ்தான். அதிலும் இந்த மாதிரி கிளைமாக்ஸ்களுக்கே காபிரைட்ஸ் வாங்கிவைத்திருக்கும் டைரக்டர் விக்ரமன் பிறந்த தமிழ் மண்ணில் இது ஒண்ணும் பெரிதாக பேசப்படுமென தோணவில்லை.
மயக்கம் என்ன என்ற தலைப்புக்கு ஜஸ்டிஃபை பண்ணவோ என்னவோ தெரியவில்லை, பட்த்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் சரக்கு சரக்கு, சரக்கல்லாமல் வேறில்லை. அநேகமாக நாற்றம் பிடித்த டாஸ்மாக்தான் கதை உருவான இடமாக இருக்க்க்கூடும். ஆனா அந்தக் கருமத்தால என்ன பிரச்சினையெல்லாம் வரும்னும் காண்பிச்சிருக்குறது ஒரு கட்டிங் அடிச்ச ஆறுதல் தருது.
வியாக்கியான பேச்சையும், நல்லவன்கிற இமேஜையும் எடுத்தெரிஞ்சுட்டு பக்கத்து வீட்டு பையனோட வாழ்க்கைய ஒட்டுபார்க்க ரெடியாயிருந்தீங்கனா, மயக்கம் என்ன பல விஷயங்களையும் புரிய வைக்கும். எவ்ளோ திட்டுனாலும் கடைசியா பாராட்டாம இத முடிக்க எனக்கு மனசேயில்ல. ஒரு சந்தோஷ சபாஷ் ஃபார் டீம் மயக்கம் என்ன.