Saturday, November 26, 2011

” மயக்கம் என்ன? ” – தெளிவான போதை


”படம் உங்களை சுத்தமாக்கும்” – தனுஷ், “பார்க்கும்போதே ஏதோ பண்ணும்”- ஜி.வி.பிரகாஷ், “இது எல்லாமே கலந்த ஒரு விதமான மயக்கம்”- செல்வராகவன். இப்புடி அவங்க படத்த பத்தி அவங்களே பேசுனாலும், படம் பார்த்து முடிக்கும்போது இந்த பேச்சுத் தகும்னுதான் தோணுது. ஒரு புதிய வாழ்வியலை எடுத்துக்காட்டும் மிகையதார்த்த படைப்பு. இதுக்கு திரைக்கதை அமைத்த செல்வாவுக்கு பூங்கொத்து கொடுக்கலாமேயானால் இதற்கு கதைக்கருவை தந்த தனுஷுக்கு பூந்தோட்டத்தையே கொடுக்கலாம். திருட்டுகளிலேயே எச்சைத்தனமானது கற்பனைத்திருட்டு. இப்படம் பார்க்கும் அத்தனை கற்பனைத் திருடர்களுக்கும் இது இதமான செருப்படி.

படத்தின் முதல் பாதி மனித இயல்புகளும், இரண்டாம் பாதி அதையும் தாண்டிய மனித இறைச்சல்களுமாக பயணிக்கிறது. வாழ்வில் என்னவாக வேண்டுமென்ற கனவைத் தவிர வேறு பிற வஸ்துக்களே இல்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு குவாட்டர் ஊத்திவிட்டு எனர்ஜி கொடுத்திருக்குறாங்க. அந்தக் கனவுக்கூட இல்லாதவர்களுக்கு, பிரெண்டோட பிகர உஷார் பண்ணுறது எப்புடின்னு கிளாஸ் எடுத்திருக்குறதா வச்சுக்கலாம்.

படத்தோட மிகப்பெரிய பிளஸ் பிண்ணனி இசைதான். அதைவிட பிளஸ் பல இடங்களில் காணப்படும் சைலன்ஸ். இரண்டையுமே சரியாக கையாண்டிருக்கும் ஜி.வி., 7ஜி ரெயின்போ காலனி வாடையில்லாமல் இசைத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும். இந்தப்பாட்டு இப்புடித்தான் இருக்கும்னு நினைச்சு போகுற ரசிகர்களுக்கு பிகர மட்டும் எதிர்பார்த்திருக்கும்போது பிகரோட தங்கச்சியும் கூட வந்தா கிடைக்குமே ஒரு சந்தோஷம் , அந்த மாதிரி தான் படம்பிடிச்சு பரவசப்படுத்தியிருக்காங்க. தனுஷின் நடிப்பு நடிப்பாக ஒரு சில இடங்களில் தெறிந்தாலும், நடிக்காத இடங்களில்தான் தேசிய விருதுக்கு தெம்பு சேர்க்கிறார். தமிழ் வராட்டியும் நடிப்பு வருதுங்குற காரணத்துக்காகவாவது ஒரு கோயில், மசூதி, சர்ச் அட்லீஸ்ட் செம்மொழி பூங்காவாச்சும் கட்டலாம் ஹீரோயின் ரிச்சாவுக்கு. இப்படியொரு ஹீரோயின் காரெக்டர் செய்யுறதுக்கு ஏகத்துக்கும் தில்லு வேணும். அத செஞ்சு காண்பிச்சு கண்ணுக்குள்ளயே நிக்குதுபா அந்தப்பொண்ணு. படத்தின் கேமரா பார்க்கும் ஒவ்வொருவரையும் காமராமேனாக வேண்டுமென தூண்டுவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு சாதாரண இளைஞனின் கதையை அசாதாரண ஸ்டைலில் சொல்லியிருப்பதும் மிகப்பெரிய பிளஸ்தான்.

மைனஸ் என்றால் எப்பொழுதும் போல் பெண்களை சுத்தி பின்னப்பட்டிருக்கும் வன்முறையும், வக்கிரமும் அதை மையமாக வைத்து கதையை சொல்லியிருக்கும் யூசுவல் செல்வராகவன் எலிமெண்ட் தான். முதல் பாதியில் ஒரு இட்த்துலகூட நெலிய வைக்கல என்றார் ஒரு நண்பர். கரெக்ட்தான் பட் அதுக்கும் சேர்த்துதான் செகண்ட் ஆஃப்ல கண்ணை மட்டுமல்ல சில இடங்கள்ல காதையும் சேர்த்தே பொத்திக்க வச்சுட்டாரே. அந்த அரை மணி நேர படத்தை செல்வாவுக்கு நிகரான நல்ல டைரக்டரொருவர் இயக்கியிருந்தால். அதையும் ரசித்திருக்கலாமோ என்னவோ தெரியவில்லை, போதும்டா சாமி நீங்க நிஜத்த நிஜமா காண்பிச்சது என்று கதரவிடுறாங்கப்பா. இன்னொரு மைனஸ் கண்டிப்பாக கிளைமாக்ஸ் . இது கிட்டத்தட்ட 1745 தடவையாவது சினிமாவில் வந்திருக்கும் கிளைமாக்ஸ்தான். அதிலும் இந்த மாதிரி கிளைமாக்ஸ்களுக்கே காபிரைட்ஸ் வாங்கிவைத்திருக்கும் டைரக்டர் விக்ரமன் பிறந்த தமிழ் மண்ணில் இது ஒண்ணும் பெரிதாக பேசப்படுமென தோணவில்லை.

மயக்கம் என்ன என்ற தலைப்புக்கு ஜஸ்டிஃபை பண்ணவோ என்னவோ தெரியவில்லை, பட்த்தில் ஒவ்வொரு ஃபிரேமிலும் சரக்கு சரக்கு, சரக்கல்லாமல் வேறில்லை. அநேகமாக நாற்றம் பிடித்த டாஸ்மாக்தான் கதை உருவான இடமாக இருக்க்க்கூடும். ஆனா அந்தக் கருமத்தால என்ன பிரச்சினையெல்லாம் வரும்னும் காண்பிச்சிருக்குறது ஒரு கட்டிங் அடிச்ச ஆறுதல் தருது.

வியாக்கியான பேச்சையும், நல்லவன்கிற இமேஜையும் எடுத்தெரிஞ்சுட்டு பக்கத்து வீட்டு பையனோட வாழ்க்கைய ஒட்டுபார்க்க ரெடியாயிருந்தீங்கனா, மயக்கம் என்ன பல விஷயங்களையும் புரிய வைக்கும். எவ்ளோ திட்டுனாலும் கடைசியா பாராட்டாம இத முடிக்க எனக்கு மனசேயில்ல. ஒரு சந்தோஷ சபாஷ் ஃபார் டீம் மயக்கம் என்ன.

Tuesday, October 26, 2010

மறக்க முடியாத ஒரு பெளர்ணமி இரவு...

”பெளர்ணமி இரவு, மொட்டை மாடி நிலவு”- இப்படி நம் வயித்தெரிச்சலை கொட்டிக்கொள்ளும் எத்தனையோ கவிஞர்களின் ரசனைகளைக் கேட்டிருப்போம். உண்மையில் இந்த இரவின் இனிமை நம்மில் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்? அதுவும் சீர்மிகு சிங்கார சென்னையிலிருக்கும் நம் பலருக்கும் திருவண்ணாமலை பேருந்துகளில் மிதமிஞ்சிய கூட்டத்தைக் காணும்போதுதான் அன்று பெளர்ணமி என்பதே புலப்படுகிறது. “நானெல்லாம் ஒரு காலத்துல நிலாச்சோறு சாப்பிட்டுகிட்டே, வெட்ட வெளியில என் நண்பர்களோடு அரட்டை அடிச்சுகிட்டு, எங்க ஊரு டூரிங் டாக்கீஸ்ல படம் பாக்குறப்ப…. ம்ம்ம்ம்… அதெல்லாம் ஒரு காலம்” – இப்புடி ஏக சலிப்பு கூட்டமொன்று நம்மிடையே உண்டு. அவர்கள் அனுபவமாய் சொல்வதைக்கூட வார்த்தையாய் கேட்க மட்டுமே கொடுத்து வைத்தவர்கள் நாம் என்பது வருத்தத்திற்குரியதே…
பெளர்ணமி இரவின் வணக்கங்களோடும், விளக்கங்களோடும் அருண் நிகழ்ச்சியைத் தொடங்க, முதலில் திரையிடப்பட்டது ”பயணம்”- எனும் தமிழ் குறும்படம். மூன்று விருதுகளோடு வாகை சூடி வந்திருந்தது அத்திரைப்படம். படத்தின் கர்த்தாவான இயக்குனர் சுப்புராஜும் நம்மோடு படத்தை பார்த்தார். வட மாநிலத்திலிருந்து நான்கு பிள்ளைகளால் துறத்தியடிக்கப்பட்ட ஒரு தந்தையின் மும்பை முதல் கன்னியாக்குமரி வரையிலான ஒரு பயணத்தை இயக்குனர் பதிவு செய்திருந்தார். 15 நிமிட படத்தின் ஒளிபரப்பு முடிந்த கையோடு இயக்குனரோடு ஒரு கலந்தாய்வு அவ்விரவை இன்னும் விறுவிறுப்பாக்கியது. ஏன்? எதற்கு? ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது? என்று கேள்விகள் அனைத்திற்கும் நிறைவாய், சமாளிப்பாய் பதில் சொல்லி அசத்தினார் இயக்குனர். மேலும் “என்னுடைய தந்தை ஒரு பேங்க் ஆபிஸர். அவரது நீண்ட நாள் கனவான சினிமாவை வைத்து அவருக்கு ஒரு கிஃப்ட் கொடுக்க நினைத்தோம். நானும் என் சகோதரர்களும், அதற்காகவே இந்தத் திரைப்படத்தை தந்தை எனும் கருவில் எடுத்து முடித்தோம்” என்று பெருமிதத்தோடு சொன்ன இயக்குனரின் தந்தை பாசத்திற்கு கை கொட்டுகள் ஏராளமாய் விழுந்தன. ”தமிழ் ஸ்டூடியோ.காம்” மாற்று ஊடகத்திற்கு களமாய் திகழும் இவர்கள் மேற்கூரிய நம் புலம்பல்களுக்கு தடா போடும் வகையில் உருவாக்கியிருப்பதுதான் “பெளர்ணமி இரவு”.. கோட்டைக்கு வடிகாலாம் கோடம்பாக்கத்தில், அவர்தம் அலுவலக மாடியில் புல்வெளியோடு, மூலிகை செடிகளும் நம்மை சூழ்ந்திருக்க, நிலவு மங்கையின் ஒளிக்கீற்று மட்டுமே மாடியை நிறைத்திருக்க, மெகா ஸ்கிரீனில் திரைப்படங்கள்.. அதுவும் டிஷ்யூம் டுமீல் ரகம் அல்ல, அழுவாச்சி சிரிப்பாச்சி வகையறாவும் அல்ல, இரண்டு படங்களுமே, நம் மனதை மயிலிறகாய் வருடும் இதமான இளையராஜா மெலோடி போன்றவைத்தான். மாடியின் அட்மாஸ்ஃபியரே நம்மை ஆட்கொண்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு சிறிய இடைவேளை. தொடர்ந்தது இரானிய இயக்குனர் மஸ்ஜித்மஸ்ஜிதி இயக்கத்தில் “தி கலர் ஆஃப் பேரடைஸ்” எனும் உலக சினிமா. ஒன்றரை மணி நேர திரைப்படத்தில் ஒரு கண் பார்வையால் சவால்விடப்பட்ட சிறுவனின் கதையை உருக்கமாய் சொல்லியிருந்தார் இயக்குனர். படத்தில் நிறங்கள் பேசின, அசைவுகள் பேசின, ஒளிப்பதிவு ஒரு புறம் பேச, ஒலிச் சேர்ப்பு மறுபுறம் பேசின, காட்சியும், கருமமும்கூட பேசின, உண்மையில் இயக்குனர் பேச நினைத்ததையெல்லாம் பேசாமல் பேசின ஒண்றரை மணி நேர செல்லுலாய்டுப் பதிவுகள். ஒரு உண்மையான பேசும் படத்தைப் பார்த்து முடித்தக் கையோடு, பேசத் தொடங்கினோம் பேச்சில் வல்லுநர்களாகிய நாம். படத்தைப் பற்றிய பல்முனைக் கருத்துக்கள், பார்வைகள், தாக்கல்கள், தூக்கல்கள் என்று படம் பார்த்ததைவிட சிறந்ததொரு அனுபவத்தை அந்த அலசல் தந்தது எனலாம். இரவு மணி 1… இனிய இரவின் காட்சிப் பகுதி நிறைவுக்கு வரவே நன்றிகளோடு அடுத்தடுத்த பெளர்ணமி இரவுக்கான வரவேற்பையும் பகிர்ந்துகொண்டார் அருண்.

மொட்டை மாடி, நிலா வெளிச்சம், அரட்டை இல்லாமலா? இரவு தங்குபவர்கள் தங்கலாம் என்னும் அறிவிப்பு நம்மைக் குஷிபடுத்த நம்மைப்போலவே தங்குவதற்குத் தயாரானார்கள் பலரும். ஒத்த ரசிப்புத் திறன் கொண்ட இத்தனை பேரை பார்ப்பதே அரிதான இக்காலத்தில் அவர்களோடு நட்பு பாராட்டவும் வழி கிடைத்தால்? டபுள் தமாக்கா ஆஃபர் தந்த தமிழ் ஸ்டூடியோவிற்கு மீண்டும் ஒரு நன்றி சொல்லி வணக்கம் போட்டோம் எங்கள் அரட்டைக்கு. எது நல்ல சினிமா? மாற்று ஊடகம் என்றால் என்ன? என்று தொடங்கி டிவி, மீடியா, நாடு, நிலைமை, இணையம், பதிவுலகம், பஞ்சுமிட்டாய் என அத்தனைக்குள்ளும் சென்று வந்த விவாதங்களுக்கு எண்ட் கார்ட் போட்ட நேரம் என்ன தெரியுமா? அதிகாலை 6.30…. சிந்தனை டேங்க் ஓவர்ஃபிளோ ஆகத் தொடங்கியதாலும் மறுநாள் பணிகள் பணித்ததாலும் வலுக்கட்டாயமாக ஒரு டீ குடித்து பிரிவு சோகத்தை ஆற்றி விடைபெற்றோம். இப்படி ஒரு இனிமையான, இதமான, இன்ஃபர்மேட்டிவான இரவு இதுவரை நான் பெற்றதில்லை. பெறச்செய்த தமிழ் ஸ்டூடியோவிற்கு நன்றிகள்.

இவ்ளோ பெரிய பதிவா? என்று என்னை ஏகவசனத்தில் திட்டிக்கொண்டிருப்பீர்களேயானால், அடுத்த பெளர்ணமி இரவிற்கு வந்து பாருங்கள். நான் பதிய மறந்த விஷயங்கள் எத்தனை இருக்குமென்று தெரியவரும்.

“பெளர்ணமி இரவு… எதிர்பார்க்கிறது வாழ்வின் ரசனையாளர்களது வரவு….”


நன்றி: www.thamizhstudio.com , to view this post directly,click below:

http://www.thamizhstudio.com/shortfilm_guidance_fmd_9.php

Thursday, October 21, 2010

”எங்களிடம் 100 நண்பர்களைக் கொடுங்கள்..!”



வளமான பாரதத்தை உருவாக்க சவால்விடும் விவேகானந்தர் யூத் கிளப்

உதவாக்கரை, உருப்படாதது, தருதலை, போக்கிரி இப்படி ஊர சுத்தி நல்ல பேரு வாங்குபவர்கள் நம் இளைஞர்களாகத்தான் இருக்க முடியும். அதிலும் ஒருவராக அல்லாமல் குழுவாக இருந்தார்களேயானால் இந்தத் திட்டும் இரட்டிப்பாகும். நாலு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் நாதாரித்தனம்தான் செய்வார்கள் என்கிற ரீதியிலான எழுதப்படாத சட்டம் ஒன்று நம் மக்களின் மனதில் பதிந்துள்ளது. இது முற்றிலும் தவறான எண்ணம் என்பதை செயலில் காட்டி வியக்கவைத்துள்ளனர் சென்னை நண்பர்கள். இவர்கள் ஒரு குழுவாக இணைந்து நடத்துவதுதான் விவேகானந்தர் இளைஞர் மன்றம். வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னை வந்து படித்துக்கொண்டிருக்கும் இவர்கள் அனைவருமே சமுதாயத்தின் மீதான ஒரே அகலப்பார்வை கொண்டவர்கள் என்கிற அடிப்படையிலேயே நண்பர்களாகி, இன்று நட்பு காட்டிய வழியில், பலருக்கும் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். “நாங்க எல்லாருமே ஃபிரெண்ட்ஸோட பிரெண்ட்ஸ்தான். எல்லாருக்குமே இந்தக் குழுவுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் ஒருவருக்கொருவர் பழக்கம். ஆனா நாங்க சமுதாயத்துக்கு எதாவது செய்யணும்ங்கிற ஒரே எண்ணத்தோட வந்ததால, எங்கள் பிரெண்ட்ஷிப் மேல ரொம்ப அதிக நம்பிக்கையும், மரியாதையும் இருக்குது. பொதுவா இளைஞர்கள் சேர்ந்தா சினிமாவுக்குப் போகணும், ஊர் சுத்தணும், நல்லா எஞ்சாய் பண்ணனும்னுதான் நினைக்குறாங்க. அதுக்காக நாங்க இதெல்லாம் துறந்துட்டு தியாகிகளா செயல்படல. இதுவும் எஞ்சாய் செய்யுறதுக்கான ஒரு வழிதான்னு பொறுப்பற்ற நிறைய பேருக்கு எடுத்துக்காட்டத்தான் இந்த அமைப்பத் தொடங்கினோம். இந்த மாதிரி இளைஞர்கள் சேர்ந்து கிளப் தொடங்குறது ஒண்ணும் புதுசுயில்ல. எங்களோட செயல்முறைகள்தான் எங்கள வித்தியாசப்படுத்திக் காட்டணும்னு ஆசப்பட்டோம்” என்று சொல்லும் குழுவின் தலைவரான ஸ்ரீகா, ஒரு பொறியியல் மாணவி.

எந்த மாதிரி வித்தியாசப்பட்டு செயல்படுறீங்க? என்று கேட்டோம். “நாங்க எல்லாத்தையுமே ரொம்ப ஆக்கப்பூர்வமா செய்யணும்னு நினைக்குறோம். எங்களோட நோக்கம் யூத் டிராண்ஸ்பர்மேஷன் என்று சொல்லப்படும், இளையோர் மனமாற்றத்திற்கானதே ஆகும். இதுல நாங்க டார்கெட் வச்சிருக்குறது எட்டாவது முதல் பணிரெண்டாவதுவரை படிக்கும் மாணவர்கள்தான். நாங்க இவங்களுக்கு விழிப்புணர்வுன்னு எதுவும் சொல்றதுல்ல. எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து, இவங்களையே விழிப்புணர்வ ஏற்படுத்தச் சொல்றோம். பிறர்க்கு ஒரு விஷயத்த சொல்லும்போது தானும் அத மனரீதியில ஏத்துக்க வேண்டிய கட்டாயத்த ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுத்துறோம். அதுதான் நாங்க எதிர்பார்க்குற மன மாற்றத்தை எங்களுக்கு எடுத்துக் காண்பிக்குது. ரொம்ப மனநிறைவா இருக்குது” என்று சொல்கிறார் இந்தக் குழுவின் அட்வைசராக இருக்கும் சாஃப்ட்வேர் பிரொபஷ்னலான உமா. நீங்கள் எத்தனை நாட்களாக இதை செய்கிறீர்கள்? என்னென்ன மாதிரியான நிகழ்வுகளை நடத்தி முடித்திருக்கிறீர்கள்? என்று கேள்விகளை அடுக்கினோம்.

“நாங்க எங்களோட குழுவத் தொடங்கி சரியா ஏழு மாசம் ஆகுது. முதல் நிலையில் ஒரு சில மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இல்லங்களுக்குப் போனோம். அவங்களோட, நிறைய நேரத்த செலவு செஞ்சோம். பின் எங்களோட டார்கெட் நிர்ணயித்தப் பிறகு, நாங்கள் மயிலாப்பூர் மாங்கொல்லையிலிருக்கும் கற்பகவள்ளி நடுநிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்தோம். அங்க முதலில் மாணவர்கள எங்களோட பேசச் செய்யுறதுக்காக ஒரு சில நிகழ்வுகள நடத்தி, பின் அவங்களுக்கெல்லாம் நாங்க பேவரெட் அக்கா,அண்ணன்களா மாறுனதும் வாழப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி ஒரு சில அறிவு சார்ந்த விஷயங்கள சொல்லிகொடுக்கத் தொடங்குனோம். மாணவர்கள குழுக்களா பிரிச்சு எங்க குழுவினர் பயிற்சி கொடுத்தாங்க. வாழ்க்கையியல், கல்வி, சமூகத்தை எதிர்கொள்ளுதல், கெட்டவையிலிருந்து ஒதுங்கி இருத்தல், மன தளர்ச்சியுறாமல் இருத்தல் என்று பல்வேறு விஷயங்களை நன்குப் பதியச் செய்தோம். இண்டெர்நெட்டிலிருந்து பல ஊக்கம் தரும், தேசப் பற்றைத் தூண்டும் காட்சிகளை டவுன்லோட் செய்து பிரொஜெக்ட் செய்கிறோம். இன்னைக்கு அந்த மாணவர்களோட மனநிலையில பெரிய மாற்றம் தெரியுது. நாங்க ஞாயிற்றுக்கிழமையிலதான் அவங்கள பார்க்கப் போவோம். ஆனா நாங்களே கிளம்புறோம்னு சொன்னாலும்கூட விடமாட்டாங்க. இந்த மாணவர்களத் தொடர்ந்து நாங்க கையிலெடுத்தது ஆரணி பக்கத்துல இருக்கிற விண்ணமங்கலம் கிராம மாணவர்களை. அங்க இருக்குற ஒரு சில பெரிய மனிதர்களோட வேண்டுதலின் பேரில் நாங்க அங்கப்போனோம். ஒரு சர்வே மாதிரி போய் பார்த்தோம். அங்க இருக்குற எந்த ஒரு மாணவனுக்கும் லைஃப்ல பிடிப்பு இல்லாதத கண்கூடா பார்க்க முடிஞ்சுது. பெற்றோர்களுக்கு படிப்போட மகத்துவம் தெரியல. ரொம்ப சிரத்தையெடுத்து நாங்க அவங்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். சொன்னா யாருமே நம்பமாட்டாங்க, ரெண்டே நாள்ல அவங்களுக்கு அவ்ளோ விஷயங்கள எடுத்துக்குற மனப் பக்குவம் வந்திருக்கு. நாங்க போயிட்டு வந்ததுக்கு அப்புறம் பசங்க ரொம்ப ஒழுக்கமா நடந்துக்குறாங்களாம். அடிக்கடி எங்கள பத்தி அவங்க டீச்சர்ஸ்கிட்ட கேக்குறாங்களாம். தொடர்ந்து மாதமொருமுறை அங்கப்போய் வெறும் 50 சதவீதம்கூட இல்லாத அவங்களோட ரிசல்ட 100 சதவீதமாக்கணும்ங்கிறதுதான் எங்களோட இப்போதைய கனவு.

இவை இல்லாம முதலுதவி குறித்த விழிப்புணர்வு முகாம், மரம் நடும் விழாக்கள்னு அவ்வபோது செஞ்சுகிட்டு இருக்கோம்” என்று தங்கள் பணிகளை விவரித்தார் லா காலேஜ் மாணவியான ராஜேஷ்வரி. படிக்கும் வயதில் நிகழ்வுகளுக்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்? போக நேரம் உங்களுக்கு கிடைக்கிறதா? “படிக்கிற பசங்களுக்கு டைம் இல்லண்ணு சொன்னா அதுதாங்க மிகப்பெரிய காமெடி. இருக்குற டைம ஒழுங்கா யூஸ் பண்ணுனாலே நெறைய செய்யலாம். அது ஒண்ணும் பிரச்சினையேயில்ல. செலவுகளுக்காக ஒரு நாளுக்கு ஒரு ரூபாய் என்கிற ரீதியில் மாதத்திற்கு முப்பது ரூபாய் ஒவ்வொரு உறுப்பினரிடமும் பெறுகிறோம். அத வச்சுதான் எல்லா செலவுகளையும் செய்யுறோம். இது போக ஒரு சில பெரிய மனிதர்கள் ஒவ்வொரு வகையில சர்டிபிகேட் அடிக்க, பரிசு கொடுக்கனு உதவி செய்யுறாங்க” என்று சொல்லும் ஸ்ரீகாவிடம், அடுத்தடுத்த பிளான்களைப் பற்றி கேட்டோம். “ஏற்கனவே நாங்க சிறப்பான மாணவர்கள்னு தேர்ந்தெடுத்திருக்குற கற்பகவள்ளிப் பள்ளியைச் சேர்ந்த பத்து பேரையும் எங்க குழுவினுடைய பயிற்சியாளர்களா சேர்த்து விண்ணமங்கலத்துக்கு அழைச்சிட்டுப் போக இருக்குறோம். இப்படி எங்க குழுவ ஒரு பெரிய அளவுல சமுதாயத் தாக்கத்துக்கு தயார் செய்யுறோம். மேலும் அடுத்த பிராஜெக்டா எம்.ஜி.ஆர். காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் பள்ளிக்கு செல்ல இருக்கிறோம். அதற்காக எங்களை நாங்களே தயார் செஞ்சுகிட்டு இருக்கோம். மேலும் ஒரு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, சிறைச்சாலை பிராஜெக்டும் பிளான் செஞ்சிருக்கோம்” என்று மகிழ்ச்சியாக குறிப்பிடுகிறார் ராஜேஷ்வரி.

“இதுமட்டுமில்லாம எங்க குழுவுக்குள்ள இருக்கக்கூடிய நண்பர்களுக்குள்ளும் ஒருவருக்கொருவர் உதவியா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கோம். எங்க நட்பைப் போலவே எங்க குழுவும் பெரிய அளவுல வளரணும்னு ஆசப்படுறோம்” உங்க குழுவுக்கு ஏதாவது தடைகள் இருப்பதாக உணர்கிறீர்களா? “அப்புடி பெருசா தடைகள்னு எதுவுமில்ல. பணப்பிரச்சினை கொஞ்சம் இருக்கு. அத சமாளிச்சுடலாம். ஆனா எங்களோட பயிற்சிக்கு ரொம்ப அத்தியாவசியமா இருக்குற பிரொஜெக்டர் குறைந்த வாடகைக்கு யாராவது தர முன்வந்தா ரொம்ப சந்தோஷப்படுவோம். எங்க குழுவுல இதுவரை 50 பேருதான் இருக்கோம். இன்னும் நிறைய நண்பர்கள் சேர்ந்தா நிச்சயமா நிறைய விஷயங்கள் செய்ய முடியும்னு நினைக்குறேன். பலருக்கும் ஏதாவது செய்யணும்னு தோணும். ஆனா எப்புடி ஆரம்பிக்குறதுன்னுதான் தெரியாது. அப்புடி சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறவங்கள சிவப்புக் கம்பலத்தோட வரவேற்கிறோம்” என்று வேண்டுகோள் விடுக்கிறார் உமா. நட்பால் இணைந்த இந்த இளைஞர்களின் வரலாறு நிறம் மாறுவதை நன்றாகவே உணர முடிகிறது. “கனவுகள் அல்ல.. காரியம் துணை..”- ஓயாமல் எதையோ நோக்கி உழைக்கும் இவர்களை பார்க்கும்போது தெளிவாகும் உண்மை இதுதான். வாழ்த்துவோம், வளரட்டும் நாளைய சமூகத்தின் இன்றைய சிற்பிகள். இவர்களுக்கு உதவ நினைப்போர், இவர்களோடு சேவையில் கை கோர்க்க நினைப்போர், தொடர்புக்கு 9360403330.

Saturday, September 25, 2010

"புதிய தலைமுறையுடனான பயணம்”


ஒரு நாள் பத்திரிக்கையாளரானால்….” – இப்புடி Add Imageமுதல்வன் பட கான்செப்ட்ல நான் எழுதி அனுப்புன ஒரு கட்டுரைதான் தகுதி சுற்றுல என்னை தேர்வாக வச்சுது. ஒரே ஒரு நாள் பத்திரிக்கையாளரானால், எனக்குள்ள ஏற்படப்போகும் மாற்றத்தைதான் எழுதியிருந்தேன். ஆனா இந்தா வச்சுக்கோன்னு ஒரு வருஷத்துக்கு எனக்கு பயிற்சி நிருபராக வாய்ப்பு கொடுத்தது ஒரு ஜாக்பாட் அடிச்ச ஃபீல கொடுத்துச்சு. பிரஸ் அப்புடின்னு அச்சடிச்ச அந்த ஐடெண்டி கார்ட் நம்மகிட்ட இருக்குறதுல எவ்ளோ பெருமை? உண்மையிலேயே புதிய தலைமுறை டீம்ல சேர்வதற்கு முன்னாலேயே நான் ரொம்ப தீவிரமான வாசகனாத்தான் இருந்தேன். காசு வாங்காத ஒரு பிராண்ட் அம்பாசிடர் ரேஞ்சுக்கு வேலை செஞ்சேன். அப்படியிருந்த நேரத்துல, “வீடு தேடி வரும் புத்தக சேவை” அப்புடிங்கிற என்னோட முதல் கட்டுரை, என்னோட பெயரோட வெளிவரும்போது இருந்த சந்தோஷத்த வார்த்தையில சொல்லிடமுடியாது. ஆனா இன்னைக்கு அந்த கட்டுரை நடைய படிச்சு பார்த்தா எனக்கே சிப்பு சிப்பா வரும். அவ்ளோ மொக்கையாத் தெரியுற அந்த நடையிலயிருந்து இன்னைக்கு எழுதுற சுமாரான கட்டுரை நடைக்கு முன்னேறியிருக்கேன்னா, இங்க என்னை செதுக்கிய ஆசிரியர்கள்தான் அதுக்குக் காரணம். புதிய தலைமுறையோட இந்த ஒரு வருஷப் பயணத்துல, இதுவரையே எக்கச்சக்கமா தெரிஞ்சுகிட்டிருக்கேன். என்னோட கனவுலகமான ஊடகத்துறையில நான் அடியெடுத்து வைக்க வாய்ப்பிருக்குன்னு தினம் தினம் எனக்கு நம்பிக்கைக் கொடுக்குறதே நம்ம பத்திரிக்கைதான். நெறைய நல்ல மனிதர்களோட தொடர்பு, பல மாற்றுத்திறனாளிகளோட உழைப்பு, எங்க போனாலும் பத்திரிக்கை பத்தின ஒரு பாசிட்டிவ்வான பின்னூட்டம்னு கெடைச்ச மதிப்பும் மரியாதையும் என் லெவலுக்கு கொஞ்சம் அதிகம்தானோனுகூட தோணுச்சு. ஒரு மாணவனா மட்டுமே இருந்த என்னை என் வட்டத்துல ஒரு மினி செலப்ரிட்டி ஆக்கியது நம் பத்திரிக்கை. நான் எழுதின ”கனா காணும் பட்டதாரிகள்” கட்டுரையின் எதிரொலியா மெட்ராஸ் யுனிவர்சிட்டியில 150 வருஷமா நடக்காம இருந்த பட்டமளிப்பு விழா இனி நடத்தப்படும்னு அறிவிப்பு வந்துச்சு. அந்த யுனிவர்சிட்டி மாணவர்கள் நமக்கு நன்றி சொன்னதையும் மறுபடியும் பதிவு செஞ்சோம். சக்தி கார்ஸ் சக்திவேல், ஆர்.ஜே. பங்காளி ராஜா, ஞானபாரதி, பெட்ரிஷியா, மித்ரா,சிவராமன், இன்னும் எத்தனையோ பேரு என்னோட கட்டுரைகள்ல முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க. வெங்கட்ராமன், சி.எம்.சி.குரு, ராஜா, இவங்க எல்லாம் என்னோட முன்னேற்றத்துல மிக முக்கியப் பங்கு வகிக்குறவங்க. இந்த சந்தோஷமான தருணத்துல அவங்களுக்கெல்லாம் நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன். பெயர் சொன்னால் ரெண்டு ஸ்பெஷல் மலரே வெளியிடலாம். எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த நம்ம “புதிய தலைமுறை”க்கும், உறுதுணையாயிருந்த என் பெற்றோர், நண்பர்கள், மற்றும் எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போதே புதிதாய் பிறந்திருக்கும் புதிய தலைமுறைக்கு முதலாமாண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களும்.....வணக்கங்களும்...

”ஆசிரியர் பணி கத்திமுனைப் பயணம்” கல்விக்கண் திறக்கும் சிவராமன்


ஆசிரியர்கள் இரண்டு ரகம். “இவர் கிளாஸா? பிச்சிக்கிட்டு ஓடுங்கடா..” இது ஒரு ரகம். “ இவர் கிளாஸ் மச்சி. கவனிச்சுட்டுப் போவோம், வா” இது மற்றொரு ரகம். நம் சிவராமன் சார் இதில் இரண்டாம் ரகம். இவரது கிளாஸ் என்றால் அக்கம் பக்கத்து டிபார்ட்மெண்ட் மாணவர்கள்கூட ஆர்வத்தோடு வந்து அமர்ந்து கவனிப்பார்களாம். அத்தனை சுவாரஸ்யமாக பாடம் நடத்தும் இவர், கண் பார்வை குறைவுள்ள ஒரு மாற்றுத்திறனாளி என்பதுதான் வலிமையான ஹைலைட்.

தற்போது பிரெஸிடென்ஸி காலேஜில் ஆங்கிலத் துறையில் பணியாற்றி வரும் இவரை ஒரு இடைவேளையில் சந்தித்தோம். “என்னோட சொந்த ஊர், திருச்சி. அங்க, நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்வரை எனக்குக் கண்பார்வை நல்லாத்தான் இருந்துச்சு. ஒரு விபத்துல என்னோட பார்வைய இழக்க நேரிட்டுது. தொடர்ந்து கொஞ்ச வருத்தம், நிறைய நம்பிக்கையோட, அரசு பார்வையற்றோர் பள்ளியிலேயே ஆறாம் வகுப்புவரை படிச்சேன். அப்புறம் அப்பாவுக்கு சென்னை டிரான்ஸ்ஃபர் கிடைச்சுது. தொடர்ந்து இங்க, பணிரெண்டாம் வகுப்புவரைப் படிச்சேன். அதுக்கப்புறம் பி.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. ஆங்கிலம், பி.எட். ”என்று பட்டங்களை சாதாரணமாக அடுக்கிய இந்த தமிழ் மீடிய மாணவர் எம்.ஏ. ஆங்கிலத்தில் கோல்ட் மெடலிஸ்டாம்.

”படிப்பில் இருந்த ஆர்வம் ஓகே. ஆனா ஆசிரியராத்தான் ஆகணும்னு ஏன் முடிவு செஞ்சீங்க?”

”நான் ஆசிரியராக முடிவு செஞ்சதுக்கு ரெண்டு முக்கியமான காரணங்களுண்டு. என்னை ஒரு முழு மனிதனா உருவாக்கிய என்னுடைய ஆசிரியர் டாக்டர்.விஷ்ணு பட். தமிழ் மீடியம் பையனான எனக்கு ஊக்கம்ங்கிற டானிக்கை ஊத்தி எனர்ஜி குறையாமல் சாதிக்க வைத்தவர். தற்போது எனக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகளில், முதல் ஆண் குழந்தைக்குக்கூட அவரது பெயர்தான் வைக்கப்போறேன்.அவ்ளோ நெருக்கம் என்னோட உள்ளத்துல அவருக்கு. அவர மாதிரி ஒரு ஆசிரியராகணும், பலருக்கும் உதவணும்ங்கிற எண்ணத்துலதான் ஆசிரியத் துறைய தேர்வு செஞ்சேன். அதுமட்டுமில்ல, கருத்தால் உழைக்கக்கூடிய துறை இது மட்டும்தாங்கிற என்னோட ஆள்மன பிரதிபலிப்பும் ஒரு காரணம்தான்” என்று தெளிவாக விளாக்கினார்.

”சாதாரணமான விழித்திறனுடைய மாணவர்கள் படிக்கிற கல்வியகங்கள்ல எப்புடி வேலைக்கு சேர்ந்தீங்க? கொஞ்சம் சிரமம்தானே?”

”நான் பி.எட். முடிச்ச கையோட ஒரு சி.பி.எஸ்.சி. ஸ்கூல்ல இண்டெர்வியூவுக்கு போயிருந்தேன். அவங்க எனக்கு உடனடியா வேலை கொடுக்கவும் முன் வரல. அதே சமயம், என்னை புறக்கணிக்கவும் மனசு வரல. அதனால எனக்கு ஒரு வாய்ப்புத் தரும் அடிப்படையில டிரெய்னியா நியமிக்குறதா சொன்னாங்க. மூணு மாசத்துக்கு அப்புறம் என்னோட பெர்ஃபாமன்ஸ் அடிப்படையில நிரந்தர வேலை தர்றதா உறுதியளிச்சாங்க. எனக்கு அப்போ தேவைப்பட்டது என்னை நானே நிரூபிக்குறதுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான். அது கிடைச்ச சந்தோஷத்துலயே பணியத்தொடங்கினேன்” என்று சொல்லும் இவர், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துக் காட்டுவதுபோல், ஒரு சில மாதங்களிலேயே தனது திறமையை நிரூபித்து, நிரந்தரமாகிவிட்டார்.

இந்த சாதனையாளரின் அடுத்த இலக்கு காலேஜ் பணிக்கானதாய் இருந்தது. இதற்கான யு.ஜி.சி.யின் நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதல் பத்து இடங்களுக்குள் பெற்று வியக்க வைத்தார். இவருக்கு ”ஜீனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்” எனப்படும் ஆராய்ச்சிக்கான ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. ஆராய்ச்சியா? வேலையா? என்றொரு சூழலில் குடும்ப சந்தர்ப்பங்களால், வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். “முதன் முதலில் வேலூர் முத்துரங்கன் காலேஜ்ல வேலைக்கு சேர்ந்தேன். 2001ல் செங்கல்பட்டு ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் காலேஜ்ல பணி செய்தேன். 2005ல இருந்து இதுவரை பிரெஸிடெண்ஸி காலேஜ்ல வேலையில இருக்கேன். என்னுடைய முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிகள் இன்னும் மூணு மாதத்துல முடியப் போகுது” என்று தனது பயணப்பாதை குறித்த திடமான பார்வை கொண்டிருக்கிறார் சிவராமன்.

இவருக்கு ஒரு சேவை முகமும் உண்டு. பல்வேறு பார்வையற்றோர் அமைப்புகளில் தொடர்பு இருந்தாலும், “வெல்ஃபேர் அசோசியேஷன் ஃபார் பிளைண்டு” எனும் அமைப்பில் நேரடி செயலராகவும் பணிபுரிகிறார். “பார்வையற்றோர் பத்தின பொதுமக்களோட அறியாமைய நீக்குறதுதான் எங்களோட முதல் பணி. அரசு வேலையையும் தாண்டி பார்வையற்றோருக்கு தனியார் துறையிலும் வேலைபெறத் தேவையான தகுதிகளை வளர்க்க உதவி செய்கிறோம். கணிப்பொறி பயிற்சிக்கான பயிலரங்கங்கள் நடத்தி, டி.சி.எஸ். போன்ற கார்ப்பரேட்களிலும் வேலைவாய்ப்பை வளர்க்கிறோம்” என்று சொல்லும் இவர், மிகவும் கவுரவமான பதவியான ரெக்ரூட்மெண்ட் பேனல் மெம்பராகவும் டி.சி.எஸ்.ல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

”ஒரு ஆசிரியரா இருக்க நீங்க பெருமைப்படுற விஷயம் என்ன?”

”தனிப்பட்ட முறையில என்னோட மாணவர்கள் ஒவ்வொருத்தருடைய சாதனையும் என்னை பெருமைப்பட வச்சிருக்கு. உதாரணத்துக்கு திடீர்னு பார்வையை இழந்த ஒரு மாணவன், ஜெயக்குமார்னு பேரு. அவனுக்கு ஒரு வருஷம் பிரெய்லி முறைக் கல்விய சொல்லிக்குடுத்தேன். பின் சென்னை லயோலா காலேஜ்ல பி.ஏ. சேர்ந்த அந்த மாணவன், அங்க ஃபர்ஸ்ட் மார்க் வாங்குனான். எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. இன்னொரு சந்தோஷமான விஷயம் நான் இப்போ பணிபுரியுற பிரெஸிடென்ஸி காலேஜ்ல தான் தமிழகத்துலயே அதிகமான பார்வையற்ற மாணவர்கள் படிக்குறாங்க. இங்க இருக்குற நூலகத்துல கிட்டத்தட்ட 30,000 புத்தகங்களையும் இ-புத்தகங்களா மாத்தி குடுத்திருக்கோம். ஒலி வடிவிலான புத்தகங்கள கொடுத்து மாணவர்களுக்கு உதவுறோம். இதெல்லாமே நான் ஒரு ஆசிரியரா இருப்பதாலதான் செய்ய முடியுது. அந்த வகையில இந்தப் பணிக்கு நான் பெருமைப்படுறதவிட அதிகமா கடமைப்பட்டிருக்கேன்னுதான் சொல்லணும்” என்று காலரைத் தூக்கிச் சொல்கிறார் சிவராமன்.

”மாணவர்- ஆசிரியர் உறவு எப்படி இருக்கணும்? இன்றைய கல்விச் சூழல் ஒரு மாணவனுக்கு ஏற்றதுதானா?”

` ”ஸ்கூல் லெவல்ல மாணவர்கள நமக்குக் கீழ் நடத்தி ஒரு பயம் கலந்த மரியாதையோட நெறிப்படுத்தணும். அதே சமயத்துல, காலேஜ்னு வந்துட்டா, பையனுக்கு தண்டனை கொடுத்துதான் திருத்தணும்னு நெனச்சா, முதல்ல இந்த எண்ணத்துல இருந்து திருந்தவேண்டியது நாமதான். அவன அவன் போக்குலயே போய் அவன நாம எப்புடி நடந்துக்க சொல்றோமோ அதுக்கு உதாரணமா, நாமே அப்புடி நடந்துக்கணும். ஆசிரியர் பணிங்கிறது ஒரு கத்தி முனை பயணம் மாதிரிதான். அதுல கவனத்தோட சுவாரஸ்யமாவும் பயணிக்கக் கத்துக்கணும். பசங்ககிட்ட பிரெண்ட்லியாத்தான் பழகணும். அதுக்குன்னு பிரெண்ட்லியா பழகுறேன் பேர்வழின்னு தப்பு செய்யக்கூடாது. ஒரு லிமிட்டோட அவன நெறிப்படுத்துனாலே காலகாலத்துக்கும் நம்மல மறக்கமாட்டான். இன்றைய கல்வி சூழல் ஓகேதான். ஆனா அரசியல் பத்துன ஒரு அறிவு மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம். அரசியல்னா தேர்தல்,கட்சிகள் மட்டுமில்ல. உலக அரசியல் ரொமப அவசியம். அதையும் சேர்த்து கொடுத்தா, மாணவர்களுக்கு இன்னும் ஏற்றதா இருக்கும்” என்று சொல்லும் இவரது வார்த்தைகளிலிருக்கும் உண்மையை உணர முடிந்தது.

”ஆசிரியர்களாகிய நாம் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்? மாணவர்களை முன்னேற்றப் போராடும் அத்தனை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்” என்று நிறைவாக ஒரு வாழ்த்து பஞ்ச் வைத்தார் நம்பிக்கை நாயகன் சிவராமன்.

பார்வைத்திறனற்ற மாணவர்கள், ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும், தொடர்பிற்கு: 9952062427, sivaramanvvs@gmail.com

படங்கள்: பிரவீன் குமார், கண்ணன்

Friday, August 13, 2010

”வம்சம்” – பெப்பரில்லா ஆஃப் பாயில்….

படத்துல நிறைய அடிதடி இருக்கும், ஆனா ஆக்‌ஷன் படம் கிடையாது. நிறைய காமெடி டிரை பண்ணியிருப்பாங்க, ஆனா இது காமெடி படமுமில்ல. அம்மா-புள்ள, காதலன் –காதலி, அப்பா-பொண்ணு அப்புடின்னு நிறைய உறவுகளின் செண்டிமெண்ட்ஸ் இருக்கும், ஆனா இது குடும்பப் படமும் கிடையாது. படம் முழுக்க எல்லாருமே கருத்து சொல்லி பாடம் நடத்துவாங்க, ஆனா இது சமூக புரட்சிக்கான படமுமில்ல. அப்ப என்னதான்யா இது? முழுநீள கலைஞர் வம்சத் திரைப்படம். ஏற்கனவே திரை உலகில் இருக்கும் அவரது வம்சத்தினர் செல்லுலாய்டில் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ, அதையேத்தான் இவர்களும் செய்துள்ளனர். ஒரே ஒரு வருத்தமான வித்தியாசம், இந்த வம்சத்திடம் இதுவரை மாட்டிய டைரக்டர்கள் வளர்ந்த நிலையிலிருந்தார்கள். ஆனால் பாண்டிராஜ்தான் பாவம், ஆரம்ப நிலையிலேயே அட்டூழியம் செய்யத்தூண்டப்பட்டுள்ளார்.

ஹீரோ பேரு அன்பரசு, ஃபர்ஸ்ட் சீன் போலிஸ் ஸ்டேஷன், குட்டீஸோட லவ்வுனு பசங்க படத்தோட பார்முலாவ செண்டிமெண்டா யூஸ் பண்ணியிருக்கிறார் டைரக்டர். ஆனா ஏனோ தெரியல, இன்னைக்குத் திண்ண மசால்வடையில ஊசல் வாடை. இண்ட்ரோ சீன்ல ஹீரோ ஸ்லோ மோஷன்ல நடந்து வற்றப்ப கெத்தா இருக்கார். ஆனா தியேட்டர்ல மயான அமைதி நிலவுது. கிட்டத்தட்ட படத்தோட முக்காவாசி கதைய முதல் சீனிலேயேயே ஒரு கான்ஸ்டபிள் சொல்லிடுறார். இதை ரொம்ப லென்த் பண்ணாமல் தவிர்த்திருக்கலாம். தேவர் இனத்தப் பத்தி ஒரு பி.ஹெச்.டி. யே செஞ்சிருக்கார் பாண்டிராஜ். படம் முழுக்க இது மாதிரி ஜாதி பெயர்கள் சரமாரியாக உபயோகிக்கப்பட்டு ரொம்ப காலமாகுதுன்னு நினைக்குறேன். படத்த பார்த்துட்டு வந்தவங்கள வெறுப்பேத்தனுமா? அவங்க கிட்டப் போய், “எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்னு” சொல்லிப் பாருங்க. கொலைவெறி ஆகிடுவாங்க.

ஹீரோயின் சுனைனா எந்த மாதிரி ஹீரோயின்னு சத்தியமா புரியல. வெட்கப்படுறாங்க, லவ் பண்றாங்க, கோபப்படுறாங்க, சைக்கிள் செயின் சுத்துறாங்க, ஹீரோகிட்ட சவால் விடுறாங்க, நாம எதிர்பார்க்குறதத் தவிர எல்லாமே செய்யுறாங்கன்னா பாத்துக்கோங்களேன். ஆனா அவங்களும் செகண்ட் ஆஃப்ல காணாம போயிட்டு கிளைமேக்ஸ்ல இரண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா வர்றாங்க. எது எப்புடியோ சுனைனா தனக்குக் கொடுத்த பாத்திரத்துல பேமண்டுக்கு அதிகமாவே நடிச்சிருக்காங்க. ஹீரோயினகூட நடிக்க வச்ச டைரக்டருக்கு சபாஷ்.

காமெடி பர்ஸ்ட் ஆஃப்ல கஞ்சா கருப்பு சரவெடி. அவர் வந்தாலே கலகலக்குது தியேட்டர். பசங்க மாதிரியே வித விதமான ரிங்டோன் மூலமா கிச்சுகிச்சு மூட்ட முயற்சி செஞ்சிருக்காங்க. கிராமத்துல இருக்கக்கூடிய செல்போன் சிக்னல் பிரச்சினைய வச்சு இவ்ளோ காமெடி யோசிக்க முடியுமான்னுதான் தோணுது. இந்த காமெடிகள்தான் நமக்கு நல்ல ஆறுதல்.

பசங்க படத்தோட வாத்தியார்தான் வில்லன். செம்ம கெத்தான தோற்றம், பேச்சு. ஆனா லுச்சாத்தனமா நெறைய செய்யுறார். சமயத்துல கஞ்சா கருப்புக்கு பதில் இவர பாத்தும் சிரிப்பு வருது. ஏன்னு தெரியல. வில்லன்கள பாத்து ஹீரோ ஓடுறாரு, ஓடுறாரு நமக்கே எரிச்சல் வர்ற அளவுக்கு ஓடுறாரு. திடீர்னு அடிக்கிறாரு, சில்லி மூக்க உடைக்குறாரு, கேட்டா சில்லி மூக்கு உடைஞ்சா நல்லதுன்னு சொல்றாரு, பக்கம் பக்கமா வசனம் கொடுத்தாலும் அப்புடியே எந்த ஏற்ற இரக்கமும் இல்லாம ஒப்பிச்சுத் தள்ளுறாரு. நடிப்பு, வசனம் ,டான்ஸ் இப்புடி எதுவுமே இல்லாட்டியும், குறை சொல்ல முடியாத இயல்பான ஹீரோ தோற்றம் ஒண்ணுதான் அவரோட பிளஸ்ஸா தெரியுது. ஊமையா நடிச்சா பெரியாளாகிடலாம்னு நினைக்குறேன்.

மியூசிக் நூர். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அசிஸ்டெண்டாம். அப்புடி எந்த அறிகுறியும் தெரியல. ஒண்ணு ரெண்டு சாங் பரவாயில்ல. பிண்ணனியில ஏதாவது டிரை பண்ணியிருக்கலாம். முக்கால்வாசி திருவிழா, ஆட்டம் பாட்டம், செல்போன் ரிங்டோன்ங்கிற பேருல இளையராஜா பாட்டுங்கள வச்சே பேக்ரவுண்ட் ஸ்கோர் செஞ்சுட்டாங்க. பெருசா மெனக்கிடல. பத்து நாள் திருவிழாவ பாதி படத்துக்கு காண்பிக்குறது, பிளாஷ்பேக்குகுள்ள பிளாஷ்பேக் வைக்குறது, எல்லா கேரக்டரும் கருத்துகள கக்கி கக்கி வாந்தியெடுக்குறதுன்னு நிறைய விஷயங்கள் சுவாரஸ்யத்த குறைச்சிடுது.

படத்துல நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்க முடியுது. புதுக்கோட்டை சைடு கிராமங்களோட திருவிழா, சம்பிரதாயங்கள், கருவறுத்தல், தமிழ் ஸ்லாங்னு நிறைய பதிவுகள் இருக்கு. இத நம்மோட கிராமத்துல நம்ம அக்கம் பக்கத்து வீட்டுல நடக்குற விஷயங்களா உணர முடியுதேத் தவிர, ஒரு சினிமாங்கிற அடிப்படையில ரசிக்க முடியல.

படத்துல யாரோட கேரக்டரையுமே புரிஞ்சுக்க முடியல. பேசுற வசனங்கள்ல இருக்குற நாடகத்தனமும் இதுக்கு ஒரு காரணம். மொத்தமா மாரல் சயின்ஸ் புக்க ஓபன் செஞ்சு படிச்ச மாதிரி பீல் இருக்குது. எல்லாமே படத்துல நார்மலா இருக்கும்போது, இத எக்ஸ்டிரா ஆட்னரியா இருக்கும்னு நாம எதிர்பாத்துட்டு போனா ஏமாற்றம்தான் கிடைக்கும். என்னைப் போலிருக்கும் பாண்டிராஜோட தீவிர ரசிகர்கள் படத்த பார்க்க வேணாம். அடுத்த படத்துக்காக வெயிட் பண்ணுவோம். வேற எதுவும் பரிகாரம் இருக்குறதா எனக்குத் தெரியல.

மொத்தத்தில் ”வம்சம்”- பெரிய “பசங்க”

Thursday, August 5, 2010

கல கலக்கும் கல்லூரிச்சாலை..

கூடுகிறார்கள்.. கொண்டாடுகிறார்கள்..

சீனியர்னா ஒரு சிங்கம், புலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து நம் முதலாமாண்டு மாணவர்களை மிரட்டி வைத்திருக்கிறார்கள், பல கல்லூரிகளில். இப்படியே உசுப்பேத்தி சும்மா இருக்கும் சீனியரையும் சுரண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டாலே கல்லூரிகளில் ராகிங் பாதி குறைந்துவிடும். அந்த கல்லுக்குள் இருக்கும் ஈரத்தை உணரச்செய்யவும், சீனியர்-ஜூனியர் மத்தியில் ஒரு ஆரோக்கியமான உறவுப்பாலம் அமைக்கவும் வந்துவிட்டது “கல்லூரிச்சாலை- கூடுவோம்.. கொண்டாடுவோம்..”.

இளைஞர்களின் இதயத்துடிப்பாய் இருக்கும் நம் புதிய தலைமுறையும், தமிழகத்தின் நெ.1 ரேடியோவான ரேடியோ ஹலோ 106.4 ம் இணைந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, புதுச்சேரி, ஆகிய ஏழு இடங்களில் கிட்டத்தட்ட 70 கல்லூரிகளில் இந்த நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். செல்லுமிடமெல்லாம் சிறப்பான வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு ஸ்பாட் ரிப்போர்டிற்காக, திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரிக்கு பயணப்பட்டோம்.

ஆங்காங்கே வரவேற்பு பேனர்கள் பளிச்சிட, மாணவர்களும் உற்சாகமாய் காணப்பட்டனர். இந்த கல்லூரியில் இப்படி நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது என்பதால் மாணவர்கள் எதிர்பார்ப்போடும், மகிழ்ச்சியோடும் காத்திருந்தனர். பொதுவாக அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இது மாதிரியான கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுப் போன்ற குற்றச்சாட்டு நிலவுவதை உணர்ந்ததால், நம் நிகழ்ச்சிக்காக கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதிலும் கவனத்தோடு செயல்பட்டுள்ளனர், ஹலோ எஃப்.எம். குழுவினர். ஹலோ அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி ஆரம்பித்தபோது தொடங்கிய ஆரவாரம், நிகழ்ச்சி முடியும்வரை ஓயவேயில்லை. மொத்தம் மூன்று போட்டிகள் நடத்தப்பட்டன.

முதல் போட்டி, “புதிய தலைமுறையே வருக!”. இது தம்ப்-சி எனப்படும் மெளன மொழி போட்டிதான். நம் தாத்தா காலத்திலிருந்து விளையாடப்பட்டு வரும் விளையாட்டாக இருந்தாலும், இம்முறை போட்டியில் ஒரு புதுமை இருந்தது. இந்தப் போட்டியில் இரண்டு பேர் சேர்ந்து ஒரு அணியாக விளையாட வேண்டும். அணியில் ஒருவர் கட்டாயம் முதலாண்டு மாணவராகவும், மற்றொருவர் இரண்டாவது அல்லது மூன்றாமாண்டு மாணவராகவும் இருத்தல் வேண்டும். பலரும் ஸ்பாட்டிலேயே தங்கள் ஜோடியைத் தேர்ந்தெடுத்தார்கள். அதுவும்கூட பெயரே தெரியாத ஜூனியர்களை அன்பாக கட்டளையிட்டு ஒவ்வொரு சீனியரும் அழைத்து வந்தது, நல்ல காட்சியாக இருந்தது. சில ஜூனியர்கள் சரியான பதிலை சொன்னபோது, அதே அணியைச் சேர்ந்த சீனியர்கள் அவர்களை அலேக்காக தூக்கிக் கொண்டாடியது, இந்தியக் கல்லூரி வரலாற்றிலேயே முதல்முறையாக என்று சொல்லுமளவு, நம்மைப் பெருமைப்பட வைத்தது.

இரண்டாவதாக நடைபெற்றதோ, “ஐடியா நேரம்”. இதுவும் சீனியரும், ஜூனியரும் ஒரு அணியாக விளையாட வேண்டிய விளையாட்டே ஆகும். சமூகப்பிரச்சினைகளை மாணவர்கள் முன் வைத்து அதற்கான அவர்களது கருத்துக்களையும், தீர்வுகளையும் அலசி ஆராய்வதே அந்த போட்டி. ”மிகப்பெரிய மூட நம்பிக்கை எது?” “கல்யாணத்துக்கு மாப்பிள்ளையின் குணத்தை பார்க்காமல், ஜாதகம் பார்ப்பதுதான்” “லஞ்சம் தொடங்குமிடம் எது?” “பேருந்தில் 50 பைசா மிச்சத்தை விட்டு வருகிறோமே அதுதான்” இப்படி கேள்விகளுக்கான பதில்கள், சுவாரஸ்யமாக வந்து விழுந்தன.

மூன்றாவது போட்டி, டிரஷர் ஹண்ட் எனப்படும் புதையல் வேட்டை. சில சீட்டுகளில் புதையல் இருக்கும் இடங்கள் குறித்த குறிப்புகள் கொடுக்கப்படும். அதை வைத்து நான்கு முதலாமாண்டு மாணவர்கள் உட்பட, ஏழு பேர் கொண்ட அணி அந்தப் புதையலை கண்டுபிடிக்க வேண்டும். இண்டியானா ஜோன்ஸ், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ரேஞ்சுக்கான தேடலுக்குப் பின் புதையலை கண்டுபிடித்தார்கள் மாணவர்கள். முந்தைய இரண்டு போட்டிகளைவிட இதில் ஜூனியர்-சீனியர் வேற்றுமை முற்றிலுமாக களைந்துவிட்டதை உணர்ந்தோம்.

நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்கும் மாணவர்களில் சிலரை “புதிய தலைமுறை ஆர்,ஜே”வாக தேர்வு செய்து ஒரு மணி நேரம் ஹலோ எஃப்.எம்.மின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வாய்ப்பு தர இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் முடிவில் வெற்றி பெற்ற பதினொறு மாணவர்களுக்கும் ஒரு அழகிய மொபைல் ஃபோன் பரிசினை ஐடியா மொபைல் திருச்சியின் நிர்வாகி, புதிய தலைமுறை திருச்சியின் சர்குலேஷன் மானேஜர், ஈ.வெ.ரா.கல்லூரி முதல்வர் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். பரிசு பெற்றதைவிட, இது போன்ற நிகழ்ச்சி மூலம் தங்கள் திறமைகளுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பிற்கே நன்றி தெரிவித்தனர் மாணவர்கள். பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனை மாணவர்களுக்கும் புதிய தலைமுறை இதழ் வழங்கப்பட்டது.

நிறைவாக ஈ.வெ.ரா. கல்லூரியின் சீனியர்-ஜூனியரிடையே இருந்த இருக்கத்தையும், தயக்கத்தையும் நீக்கிவிட்ட மன நிறைவோடு விடைபெற்றோம். தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளிலும் தொடரும் இந்த கல்லூரிச்சாலையின் பயணத்தை, சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல், நெகிழ்வோடு மாணவர்கள் மனதில் பதிவிப்பதில் பெருமைப் படுகிறது புதிய தலைமுறை. இதை வெற்றி நிகழ்வாக மாற்றிவரும் மாணவர்களுக்கும், நிகழ்ச்சியின் மற்ற விளம்பரதாரர்களுக்கும், நிகழ்ச்சி நடத்துனர்களான ரேடியோ ஹலோவிற்கும் புதிய தலைமுறையின் நன்றிகள்.