”படித்தவர்கள் பாடம் நடத்துகிறார்கள். படிக்காதவர்களோ பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்.” இதுதான் நமது இன்றைய உலகின் நிதர்சன உண்மை. தேர்வில் தோல்வியடைபவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவதும், தேர்வை வென்றவர்கள் ஒரு சில காரணங்களால் வாழ்வில் தோற்பதும் இயற்கையே. படிப்புதான் வாழ்வாதாரம், அது சரியாக அமையாவிட்டால் வாழ்வே அவ்வளவுதான் என்பதெல்லாம் மாயைதான். பத்தாவது மற்றும் +2 தேர்வுகள் நம் திறமைக்கான மடிப்பீடு கிடையாது. அது நமக்குள் இருக்கும் ஞாபகசக்தியையும், விஷயத்தை உள் வாங்கும் திறனையும் மதிப்பீடு செய்வதே ஆகும். உள்வளத்திறமைக்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. கல்வி கனவாய் போயினும் திறமையை மட்டுமே கொண்டு இன்று சிகரம் தொட்டிருக்கும் ஒரு மனிதரைத்தான் சந்திக்க இருக்கிறோம். வீட்டில் நான்கு கார்கள், வீடு முழுவதும் ஏ.சி., இதுதான் பணக்காரர்களுக்கான பொதுவான அடையாளக் குறியீடுகள். இவரிடமோ நூற்றுக்கணக்கில் கார்கள், அத்தனை வகையான ஏ.சி.க்கள். மலைத்துப் போக வேண்டாம். இவை அனைத்துமே விற்பனைக்குத்தான். சென்னை ஆதம்பாக்கத்தில் உயர்ந்து நிற்கும் “சக்தி கார்ஸ்” உரிமையாளர் சக்திவேல் அவர்களை சந்தித்தோம். தஞ்சாவூர் மாவட்டம் ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தில் பிறந்த இவர் படித்ததோ ஒன்பதாம் வகுப்பு வரைதான். இன்று வணிகத்தின் உச்சாணிக்கொம்பிலிருக்கும் இவர் முதன் முதலாக ஒரு சோடா கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாராம். அன்றைய இவரது வருமானம் நாளொன்றிற்கு 50 பைசா. இதில் தொடங்கிய இவரது பயணம் திசையறியாமல் சென்று கொண்டிருந்த நேரத்தில் இவருக்கு புதுக்கோட்டையில் மாதம் 240 ரூபாய் வருமானத்தில் ஒரு வேலை கிடைத்தது. இதில் திருப்தியடையாததால் அந்த காலகட்டத்தில் டிரைவிங் லைசன்சு மட்டும் இருந்தால் டிரைவர் வேலை உறுதி என்கிற சூழ்நிலை நிழவியதை உணர்ந்தார். இதற்காக தனது சம்பளத்தில் மாதம் 60 ரூபாய் வரை மிச்சம் பிடித்து, பத்து மாதங்கள் முடிவில் ரூ.600 செலுத்தி டிரைவிங் லைசன்சு பெற்றிருக்கிறார். இதைத்தொடர்ந்து ஒரு லாரியில் கிளீனரானார். தொடர்ந்து ஓட்டிப் பழகி லாரி டிரைவராகவும் பிரமோஷன் பெற்றிருக்கிறார். ஆனால் இந்தத் தொழிலிலும் வெறுமையே மிஞ்ச, ஒரு காருக்கு டிரைவராகலாம் என ஆசைப்பட்டு கார் டிரைவராக பணியைத்தொடர்ந்தார். அப்போது சும்மா இருக்காமல் கிடைத்த வருமானத்தில் இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பி.ஏ. லிட்ரேச்சர் படித்துத் தேறி இருக்கிறார். பின்னர் கார் டிரைவர் எனும் நிலையைத் தாண்டி வர எண்ணி சொந்தமாக ஒரு காரை வாங்கி சக்தி கேப்ஸ் என்ற பெயரில் ஒரு டிராவல்ஸ் ஆரம்பித்திருக்கிறார். அந்த நேரம் கார்களின் கட்டமைப்புகள், மெக்கானிஸம் குறித்த தெளிவான யோசனை இல்லாதலால் இவர் வாங்கிய இரண்டு கார்களும் கோளாராகி இவருக்கு நஷ்டம் லட்சங்களைத் தொட்டது. தோல்வியால் துவளாத இவர், இந்த நஷ்டத்திற்கான காரணியை அலசி ஆராய்ந்தபோது, கார் மெக்கானிஸம் தெரியாத தனது அறியாமையையே நொந்து கொண்டுள்ளார். பின் தானே முன் வந்து கார்கள் குறித்த அத்தனை நுணுக்கங்களையும் கற்று, தன்னைப்போல் மெக்கானிஸம் தெரியாமல் கார் வாங்குவோரின் நலனைக்கருதி தானே கார்களை வாங்கி விற்க முடிவு செய்தார். அன்று எடுத்த முடிவுதான் இன்று “சக்தி கார்ஸ்” என்னும் பெயரில் ஓங்கி வளர்ந்திருக்கிறது. தற்போது பூமி வெப்பம் அடைவதால் மக்களின் அடுத்த அத்தியாவசியத் தேவையாக மாறி வரும் ஏ.சி.களை விற்கவும் முடிவு செய்து தொழிலைத் தொடங்கியுள்ளார். நாளுக்கு 50 பைசா என்கிற ரீதியில் தொடங்கிய இவரது தொழில் பயணத்தில் இன்று இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா? நாளொன்றிற்கு கிட்டத்தட்ட ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை. இந்த உச்சத்தைத் தொட இவருக்கு உதவியது எது என்று கேட்டோம். “எனது முன்னேற்றத்தில் எந்த ஒரு இடத்திலும் எனக்கு குரு என்று யாருமே இருந்தது கிடையாது. நான் எந்த ஒரு வேலையிலும் தன்னிறைவு பெறாமல் முயன்றதால்தான் தொழில் முனைந்தேன்..தொழில் முனைகிறேன்.. இன்னும் அதிகமாக தொழில் முனைவேன்”என்று சொன்ன இவரிடம், ”நீங்கள் சந்தித்த மிகப்பெரிய சோதனை ஏதேனும் உண்டா?” என்று கேட்டோம். “தொழில் என்று வந்துவிட்டாலே தினம் தினம் சோதனைதான். நான் சொந்தமாக கார்கள் வாங்குவதற்கு முன்பாக பணம் சேர்க்கும் ஆசையில் சில காலம் சிங்கப்பூரில் கட்டிடக் கூலி வேலை செய்தேன்.ஒரு முறை எனக்கு அம்மை நோயின் தாக்கம் இருப்பதாக தெரிய வந்தது. ஒரு மாத விசா மட்டுமே மீதமிருந்த நிலையில் டிரீட்மெண்டிற்குக் கூட வெளியே செல்லமுடியவில்லை. வேப்பிள்ளை, லெமன், என்று எதுவுமே கிடைக்காத பட்சத்தில் உடல் முழுவதும் சீல் வடிந்துகொண்டிருந்தது. அங்கு ஒரு வெள்ளிக்கு ஒரு சட்டை என்கிற வீதம் தினமும் ஒரு சட்டையை அணிந்து சமாளித்துகொண்டிருந்தது இன்று நினைத்தாலும் தாங்கமுடியாத வேதனைதான். இருப்பினும் பொருள் சம்பாதிக்கப்போன ஒரே காரணத்தால் அத்தனையையும் பொறுத்துகொண்டேன்” என்று தனது சோதனையான அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். சம்பாதிப்பதோடு நிறுத்திவிடாமல் அதை பல சேவைகள் மூலம் பயனுள்ள வகையில் செலவு செய்கிறார் சக்திவேல். இவர் தனது சொந்த ஊரான ஆர்.சுத்திப்பட்டு கிராமத்திற்கு ஒரு பெரிய நூலகத்தை தனது சொந்த செலவில் கட்டிக்கொடுத்திருக்கிறார். இந்த நூலகத்தில் 10,000 புத்தகங்கள் வரை இருக்கின்றன. இதே ஊருக்கு நுழைவு வழைவு, தண்ணீர்த் தொட்டி, மாணவர்க்கு நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளார். இவர் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும்கூட பல காரணங்களால் பிரிந்து கிடந்த தனது கிராமத்துத் தெருக்களை இணைக்க இருக்கின்ற ஒரே வழி கோயில் தேரோட்டம்தான் என்பதை மனதில்கொண்டு தனது செலவிலேயே தேரோட்டத்தை எடுத்து நடத்தியிருக்கிறார். மேலும் தன்னால் படிக்கமுடியாவிட்டாலும், வறுமையின் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் இருக்கும் பல மாணவர்களுக்கு கல்விச் செலவைத் தானே ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு சென்னையில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இதுவரை இவறால் பயன்பெற்றுள்ளனர். ”மாணவர்களுக்கு உதவி செய்வதை விட, நம்மால் உதவி பெற்ற மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சிபெறும் செய்தி கிடைக்கும்போதுதான் உண்மையான ஒரு தன்னிறைவு கிடைக்கிறது” என்று குறிப்பிடுகிறார். மேலே நாம் பார்த்துவரும் இந்த ஆர்.சுத்திப்பட்டு சக்திவேல் அவர்களுக்கு இன்னொரு வெற்றுத்திருமுகமும் உள்ளது. கவிமுகில் என்கிற தனது புனைப்பெயரில் கவிஞர்.தாராபாரதி அவர்களை மானசீக குருவாகக் கொண்டு இவர் பல கவிதை, ஹைக்கூ, நாவல், சிறுகதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். இலக்கியத்துறையில் புகழ் பெறுவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கும் இவர், இதே துறையில் நலிவடைந்த அறிஞர்களை கவுரவித்து உதவிகளும் செய்து வருகிறார். வருடந்தோறும் இவர் நடத்திவரும் தாராபாரதி அறக்கட்டளை சார்பாக சிறந்த நூல்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இவரது எழுத்திற்கு அங்கீகாரமாக அமெரிக்காவில் உள்ள இயல் பல்கலைக்கழகத்தின் பாட திட்டத்தில் இவரது ஒரு படைப்பு மொழி பெயர்க்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரிடம் ”தேர்வில் ஏற்படும் தோல்விகளை எப்படி எதிர்கொள்வது?” என்று கேட்டோம். “தேர்வில் வெற்றிபெற்றவர்களைவிட தோல்வியடைபவர்கள்தான் வாழ்க்கையை நிறைய உணர முடியும். வாழ்வின் ஏணிப்படிகள் உங்கள் கால்களுக்காக காத்திருப்பதை உணருங்கள்.நம் மீது நாமே கவனம் செலுத்த ஒரு வாய்ப்பாகவே தோல்வியைக்கருதுங்கள். பெற்றோர்களும் அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளோடு தங்கள் குழந்தைகளை ஒப்பிடுதலை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. ஏனென்றால் என்னோடு படித்த பலரும் டிகிரி முடித்தனர். ஆனால் இன்று அவர்கள் 20,000 முதல் 30,000 தான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் நானோ இன்று லட்சங்களை ஈட்டுகிறேன்.” என்று சொல்லி நம்மை வியக்கவைத்தார்.இவர் இயக்கியிருக்கும் “எதிரே உன் ஏணி” எனும் குறும்படத்தில் முதல் காட்சியிலேயே பேங்காக்கில் வசிக்கும் ஒருவரது அன்றாட நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த நபருக்கு இரண்டு கால்களும், கைகளும் கிடையாதாம். இருப்பினும் யாருடைய உதவியும் இல்லாமல் அவரால் இயங்க முடிகிறதாம். வெருங்கை என்பது மூடத்தனம். பத்து விரல்கள்தான் நம் மூலதனம் என்னும் புதுமொழியை சொல்லி நமக்குள் நம்பிக்கை விதை தூவினார். வணிகம், சேவை, எழுத்து எனும் மூன்று குதிரைகளில் வெற்றிகரமாக பயணம் செய்யும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது தோல்வியில் துவளாமை மட்டுமே. “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?” – வெற்றிகொண்டார்களின் பயணம் தொடரும்…..
No comments:
Post a Comment